கடத்தல் சிலைகளை விற்க முயன்ற பாஜக பிரமுகர், 2 காவலர்கள் உட்பட 4 பேர் கைது


பாஜக பிரமுகர் அலெக்சாண்டர்

ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியில் தொன்மைவாய்ந்த சிலைகளை சிலர் விற்க முயற்சிப்பதாக, மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸார் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

தலைமைக் காவலர் இளங்குமரன், ஆயுதப்படை காவலர் நாகநாகேந்திரன்

அப்போது தொன்மை வாய்ந்த சிலைகளை விற்கமுயன்ற ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும், இவர் பாஜகவில் ராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளராக இருப்பதும் தெரியவந்தது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த காவலர் இளங்குமரன் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த கருப்புசாமி ஆகியோர் தொன்மையான இந்தச் சிலைகளை கொடுத்து விற்றுத்தரச் சொன்னது தெரியவந்தது. பாஜக பிரமுகர் அலெக்ஸாண்டர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவலர் இளங்குமரன் மற்றும் கருப்புசாமி ஆகியோரை சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கருப்பசாமி

விசாரணையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநாகேந்திரன் இருவரும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த கணேசன், கூட்டாளி விருதுநகரைச் சேர்ந்த கருப்புசாமி ஆகியோர் சேலம் எடப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சிலைகளை விற்பதாகத் தகவல் அறிந்து அங்கு சென்று, தாங்கள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் எனக்கூறி, தொன்மையான 7 சிலைகளைப் பறித்துச் சென்று, ராமநாதபுரம் மாவட்டம் கூரிசேத்தனார் அய்யனார் கோவிலின் பின்புறம் உள்ள கால்வாயில் மறைத்து வைத்துள்ளனர். பின்னர் அந்தச் சிலைகளை பாஜக பிரமுகர் அலெக்சாண்டரிடம் கொடுத்து, 5 கோடி ரூபாய்க்கு விற்கமுயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அவர்கள் மறைத்து வைத்திருந்த 2 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள நாகக்கன்னி சிலை, ஓரடி உயரமுள்ள காளி சிலை, முக்காலடி உயரமுள்ள முருகன் சிலை, அரை அடி உயர விநாயகர் சிலை, அரை அடி நாக தேவதை சிலை ஆகிய 7 தொன்மைவாய்ந்த சிலைகளைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள்

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள்

பறிமுதல் செய்த 7 சிலைகள் எந்தக் கோயிலைச் சேர்ந்தவை என்பது குறித்தும், சிலைகளின் தொன்மை குறித்த விசாரணையும் நடைபெற்று வருவதாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ராஜேஷ், கணேசன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

x