சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் கேட்டு பயணியை தாக்கிய போதை காவலர்


சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணியை பிளாட்பார்ம் டிக்கெட் கேட்டு தாக்கிய போதை காவலரை தட்டிகேட்ட ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே உதவி ஆய்வாளர்கள் மீது எச்சில் துப்பி போதை காவலர் செய்த ரகளையால் அவர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, பெரியமேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவுக் காவலராக பணியாற்றி வருபவர் சபரி குமார்(28). இவர், நேற்றிரவு குடிபோதையில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது, டெல்லி செல்வதற்காக ரயில் நிலையம் வந்த புதுச்சேரியை சேர்ந்த ஜாவித்(26), நடைமேடை அருகே நின்று டீ குடித்துக் கொண்டிருந்தபோது போதையில் இருந்த காவலர் சபரிகுமார், அவரை தடுத்து நிறுத்தி, எதற்காக இங்கு நிற்கிறாய் எனக்கேட்டுள்ளார். அதற்கு ஜாவித் பாண்டிச்சேரியில் இருந்து டெல்லி செல்வதற்காக வந்துள்ளதாகக் கூறி பயணச்சீட்டை காண்பித்துள்ளார்.

அதற்கு காவலர் சபரிகுமார், “பிளாட்பார்ம் டிக்கெட் எங்கே” என கேட்டு தகராறில் ஈடுபடவே, ஜாவித் “ரயில் டிக்கெட் இருக்கும்போது எதற்கு பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கவேண்டும்” என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் சபரிகுமார், “போலீஸையே எதிர்த்துப் பேசுறியா” எனக்கூறி அவரை அடித்தாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அமித் குமார் மீனா, “பயணியிடம் எதற்காக தகராறில் ஈடுபடுகின்றாய்” என காவலர் சபரியிடம் கேட்க, அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சபரிகுமாரை சென்ட்ரல் இருப்புப்பாதை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்துள்ளனர்.

விசாரணைக்கு ஒத்துழைக்காமல், காவலர் சபரிகுமார் ரயில்வே இருப்புபாதை உதவி ஆய்வாளர் குணசேகரனை தள்ளிவிட்டு, அவர்மீது எச்சில்துப்பி தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, பெரியமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து காவலர் சமரசம் பேசியபோது, எனது தம்பி வழக்கறிஞராக உள்ளார் என்றும், என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், “குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட காவலர் சபரிகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காவலர் சபரிகுமார் குடிபோதையில் போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

x