மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் 13 பேர் கைது @ திருநெல்வேலி


திருநெல்வேலி: பாளையங்கோட்டை ஆயுதப்படை சாலை அருகே உள்ள நம்பிக்கை நகரை சேர்ந்த மதன் (28), பெருமாள்புரத்தை சேர்ந்த உதயதாட்சாயினி (23) ஆகியோர்காதலித்து வந்தனர். இதற்கு பெண்வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி, பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும், அவர்களுக்கு கட்சி அலுவலகத்தில் அடைக்கலம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையறிந்த பெண் வீட்டாரின் உறவினர்கள் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் அங்கிருந்த வழக்கறிஞர் பழனி, கட்சி நிர்வாகி அருள்ராஜ் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பெண்ணின் தந்தை முருகவேல்(55), தாய் சரஸ்வதி (49), அண்ணன் சரவணகுமார்(27), தாய்மாமா புதுப்பேட்டை சங்கர்(35), பெரியம்மாக்கள் அருணாதேவி (51), மதுரை வேணி (52),உறவினர்கள் குரு கணேஷ்(27), யோகீஸ்வரன்(23), மார்த்தாண்டத்தை சேர்ந்த சித்தி சுமதி(44), பாட்டி ராஜிலா (75), சகோதரிகள் ஸ்டெல்லா (29), சூர்யா(32) மற்றும் பந்தல்ராஜா ஆகிய 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அத்துமீறி கும்பலாக நுழைந்தது, மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட9 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, வயது மூப்புகாரணமாக ராஜிலாவுக்கும், கைக்குழந்தை இருப்பதால் சூரியாவுக்கும் காவல் நிலைய ஜாமீன் வழங்கப்பட்டது.

மேலும், கைதானவர்களில் மீதமுள்ள 5 பெண்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 6 ஆண்கள் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

x