விருதுநகர்: மூதாட்டி கொலை வழக்கில் சிறப்பு எஸ்.ஐ மகன் கைது


கைது செய்யப்பட்ட ஜீவராஜன்.

விருதுநகர்: விருதுநகரில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி, பேனாவால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ. மகன் இன்று கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் ராமமூர்த்தி ரோடு திருவேங்கடம் மருத்துவமனை எதிரி வசிப்பவர் குருசாமி மனைவி வேலம்மாள் (75). இவர்களுக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர்.

கணவர் இறந்ததால் வேலம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது மகள்கள் அவ்வப்போது கவனித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி வீட்டில் வேலம்மாள் தனியாக இருந்தபோது சுமார் 32 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்த மர்ம நபர் ஒருவர் வேலம்மாள் வீட்டுக்குள் புகுந்து, அவரை பேனாவால் உடல் முழுவதும் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் கொலை செய்த மர்ம சைக்கோ நபர் யார் என்பது குறித்தும், அவர் தப்பி சென்ற வழிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் உள்ள பதிவுகளையும் கண்காணித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, கொலை நடந்த பகுதியில் நடமாடிய அருப்புக்கோட்டை போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு சிறப்பு எஸ்.ஐ யோகமுருகன் என்பவரது மகன் ஜீவராஜன் (29) என்பவரை போலீஸார் இன்று கைதுசெய்தனர்.

அப்போது, கொலை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள தனியார் லாட்ஜிக்கு ஜீவராஜன் அடிக்கடி வந்து செல்வதும், இவர் பொறியியல் பட்டதாரி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் மூதாட்டி கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.