ஊழலில் சிக்கிய ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் அதிரடி இடமாற்றம்!


ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் சங்கீதா

கோவை ஆவின் நிறுவனத்தில் ஊழல் புகாரில் சிக்கிய ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் சங்கீதா சென்னைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை ஆவினில் கடந்த 2018ம் ஆண்டு விற்பனை பிரிவில் மேலாளராக சங்கீதா என்பவர் பணியில் சேர்ந்தார். இவர் பலருக்கு பல லட்சம் வரையிலான பால் பொருட்களை கடனுக்கு அளித்து ஆவின் நிறுவனத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புகார் கூறப்பட்டது.

இந்த புகாரின் பேரில், கடந்த மாதம் சென்னையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 4 நாட்கள் கோவை ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். இதில், பால் பொருட்கள் விற்பனை செய்ததில் ரூ.60 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. இந்த முறைகேடு விவகாரத்தில், கோவை ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் சங்கீதா மற்றும் மண்டல விற்பனை அலுவலர்கள் சுப்ரமணியம், ஜீவிதா, சாமிநாதன் போன்றவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், பால் உபபொருட்கள் கடன் அடிப்படையில் யார் யாருக்கு வழங்கப்பட்டது? என்பது குறித்த தகவலை அதிகாரிகள் பெற்று கொண்டனர். இந்நிலையில், ஊழல் புகாரில் சிக்கிய கோவை ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் சங்கீதா தற்போது சென்னைக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

x