கும்பகோணம்: திருவிடைமருதூர் அருகே திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கலைவாணன் (30). திருப்பனந்தாள் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கா.சோ.க. கண்ணனின் சகோதரி மகன் ஆவார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற அவர், அன்று நள்ளிரவு தோட்டத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து பந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கலைவாணனின் வைக்கோல் போருக்கு சிலர் தீ வைத்திருந்தனர். அவரது வீட்டுக்கு அருகில் கிடந்த ஒரு துண்டுச் சீட்டில், ‘அடுத்தது, உயிரா?, பொருளா?’ என எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பந்தநல்லூர் போலீஸில் கலைவாணன் அந்த சமயத்தில் புகார் அளித்திருந்தார்.இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் உட்பட 11 பேரிடமும், கலைவாணன் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வயலில் கிடந்த அவரது செல்போன் மற்றும் ஆயுதங்களை 16-ம் தேதி கண்டெடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியது: ‘கலைவாணன் கொலை செய்யப்பட்ட நாளிலிருந்து, சந்தேகத்தின் பேரில் அவரது பெரியப்பா பாஸ்கரின் மகன் அருண்பாண்டியனை, போலீஸார், ரகசியமாக கண்காணித்து வந்தனர். மேலும், அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால், மற்றவர்களிடம் விசாரிப்பது போல், அவருடன் நெருக்கமானவர்களிடம் விசாரணை மேற்கொண்டோம். கலைவாணன் தனது செல்போனில் இருந்து இறுதியாக 3 முறை அருண்பாண்டியனிடம் பேசியது விசாரணையில் தெரியவந்தது.
கலைவாணனிடம், அவரது பெரியப்பா மகனான அருண்பாண்டியன், பல லட்சங்களைப் பெற்றுக் கொண்டு, திரும்ப தரவில்லை எனக் கூறப்படுகிறது. பணத்தை கலைவாணன் திரும்பக் கேட்டதால், ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் கலைவாணனை கொலை செய்தது தெரியவந்துள்ளது’, என்றனர்.