சசிகலாவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய பரப்பன அக்ரஹாரா சிறை!


வி.கே.சசிகலாவை தொடர்ந்து பிரபல ரவுடி ஜேசிபி நாராயணாவால், மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை.

பெங்களூருவின் பிரபல ரவுடி, ஜேசிபி நாராயணா எனப்படும் நாராயணசாமி. இவன் மீது கொலை, கொலை முயற்சி உட்பட ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ’கேங் வார்’ காரணமாகவும் அடிக்கடி செய்திகளில் அடிபடுவது நாரயணாவின் வழக்கம். நாராயணாவின் கிரிமினல் திருவிளையாடல்கள் அல்லது அவனுக்கு எதிரான கும்பல்களின் தாக்குதல்கள் ஆகியவை தொடர்பான வீடியோக்கள், பெங்களூரு நகரின் சிசிடிவி கேமராக்களின் உபயத்தால் அவ்வப்போது வெளியாவதுண்டு. முதல்முறையாக நாராயணா தொடர்பான வித்தியாசமான வீடியோ வெளியாகி உள்ளது.

பெங்களூரு காவல்துறையின் கறுப்பாடுகள் உதவியால் நாராயணா கொடி தனித்து பறக்கும். ஒவ்வொரு கிரிமினல் நடவடிக்கை முடிந்த பிறகும் சிறைக்கு சென்று பதுங்கிக்கொள்வது நாராயணாவின் பாணி. அப்படி அண்மையிலும் சம்பவம் ஒன்றை நிகழ்த்திவிட்டு சிறைக்குள் சென்று பதுங்கிக்கொண்டான். இப்படி போலீஸார் உதவியிடன் சிறைக்கு சென்று திரும்பும் நாராயணாவின் முகத்திரையை கிழிக்க அவனது எதிரிகள் முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் மேற்கொண்ட ரகசிய ஏற்பாடுகள் மூலம், சிறையில் தனி ராஜ்யம் நடத்தும் நாராயணா குறித்த வீடியோக்கள் வெளியாகி பரப்பரப்பை கிளப்பி உள்ளன.

பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒரு நட்சத்திர விடுதிக்கு இணையான வசதியுடன் தங்கியிருக்கும் நாராயணா, அவனை சிறையில் சென்று ஆலோசித்து திரும்பும் போலீஸார், வழக்கறிஞர், அரசியல்வாதிகள் ஆகியவை ரகசியமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. டிவி, சோபா, செல்போன், தனி சமையலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை அடங்கிய சிறையில் நாராயணா உலவுவதும், அவனை சந்தித்து போலீஸார் கப்பம் பெற்று திரும்புவதும் கூட வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த பிரத்யேக வீடியோவை எடுத்தவர்கள் உள்ளூர் கன்னட தொலைக்காட்சி ஒன்றில் மூலமாக உலகுக்கு வெளிப்படுத்தி உள்ளனர். சசிகலாவைத் தொடர்ந்து அதே போன்ற சர்ச்சையில் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் சிக்கியுள்ளது. அங்கு சசிகலா சிறைவாசம் இருந்தபோது, அவருக்கு விஐபி வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், சிறைக்கு வெளியே ஷாப்பிங் சென்று திரும்பியதாகவும் ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாயின. இதனையடுத்து சிறப்பு விசாரணை, சிறை அதிகாரிகள் மாற்றம், அரசியல் சர்ச்சை உள்ளிட்டவையும் அரங்கேறின.

அதே பாணியில் தற்போது ரவுடி நாராயணா, பரப்பன அக்ரஹாரா சிறையில் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தது அம்பலமாகி உள்ளது. வீடியோ ஆதாரம் வெளியானதை அடுத்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திரா, தனி விசாரணைக்கும் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

x