2020-ல் மகளுக்கு நடந்த கொடுமை... 2022-ல் பழி தீர்த்த தந்தை


துப்பாக்கி

2020-ல் மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஓய்வுபெற்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த தில்ஷாத் ஹுசைன் என்பவர் அங்குள்ள பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவரது வீடு அருகே ஓய்வுபெற்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரர் பகவத் நிஷாத், தனது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பகவத் நிஷாத் மைனர் மகளை தில்ஷாத் கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பான புகாரில், 2021 மார்ச் மாதம் ஹைதராபாத்தில் தில்ஷாத்தை காவல் துறையினர் கைது செய்ததோடு, பகவத்தின் மகளை மீட்டனர். தன்னை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சிறுமி அளித்த புகாரின் பேரில், தில்ஷாத் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், வழக்கறிஞரின் அழைப்பின்பேரில் கோரக்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு தில்ஷாத் வந்துள்ளார். அப்போது, வழக்கறிஞரை சந்திப்பதற்காக அவர் காத்திருந்த நிலையில், திடீரென அங்கு வந்த பகவத் நிஷாத், தான் வைத்திருந்த துப்பாக்கியால் தில்ஷாத்தை சுட்டுக்கொன்றார். காவல் துறையினர் பகவத் நிஷாத்தை கைது செய்தனர்.

2020-ல் தனது மகளுக்கு நடந்த கொடுமைக்கு தந்தை தற்போது பழி தீர்த்துள்ளார். இருந்தாலும் பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்திலேயே, ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x