சட்டக் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு


சென்னை மாநகரக் காவல் ஆணையர்

சென்னையில் முகக்கவசம் சரியாக அணியாமல் வந்ததாக முஸ்லிம் இளைஞரான, சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி புதுநகரைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம்(21). இவர் தரமணி சட்டக்கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி நள்ளிரவு பணியை முடித்துவிட்டு, கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் பகுதியில் தனது வாகனத்தில் வந்தபோது, போலீஸார் தடுத்துநிறுத்தி முகக்கவசம் அணியாமல் சென்றதாக வழக்குப் பதிவு செய்து அபராதம் செலுத்துமாறு கேட்டனர்.

அப்போது ரஹீம், “முகக்கவசம் அணிந்துள்ளேன் எதற்கு அபராதம் கட்ட வேண்டும்” என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காவலர் உத்திரகுமார் என்பவரை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. உடனே, போலீஸார் ரஹீமை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, இரவு முழுதும் காவல் நிலையத்தில் வைத்து அவரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்துக் காயப்படுத்தி கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், மாணவர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று, ரஹீமுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாயின.

அந்த வீடியோவில் ரஹீம், சம்பவத்தன்று முகக்கவசம் அணிந்து வந்ததாகவும், ஆனால் அதை ஒழுங்காக அணியவில்லை என போலீஸார் அபராதம் செலுத்தக் கூறியதாகவும், அதற்கு முடியாது எனக்கூறி பார்மசியில் வேலைபார்க்கும் ஐடி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் எனக் கூறியதால், அசிங்கமாகத் திட்டி வழக்குப் பதிவுசெய்து காவல் நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துவந்ததாகப் பதிவாகி இருந்தது. இதையடுத்து தன்னை நிர்வாணமாக்கி இரவு முழுதும் பைப் மற்றும் பூட்ஸ் காலால் அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரஹீம் புகார் அளித்தார்.

இதையடுத்து சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை தாக்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமை காவலர் பூமிநாதன், முதல்நிலை காவலர் உத்திரகுமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம்செய்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

மேலும் காவல் ஆய்வாளர் நசீமா, ஆய்வாளர் ராஜன் உட்பட கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மூவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவன் அப்துல்ரஹீம் அளித்த புகாரில், தற்போது இந்த வழக்கில் ஆய்வாளர் நசீமா, காவலர் உத்திரகுமார், பூமிநாதன், ஹேமநாதன், சத்தியராஜ், ராமலிங்கம், அந்தோணி உட்பட 9 பேர் மீது ஆபாசமாகத் திட்டுதல், ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல், காயப்படுத்துதல் ஆகிய 3 பிரிவின்கீழ் (294(b) 323,324) கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

x