பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்ட 2 பேருக்கு குண்டாஸ்!


போத்தனூர் அருகே அவமதிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை

போத்தனூர் அருகே தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமதிப்பு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டடம், போத்தனூர் அருகே வெள்ளலூரில் உள்ள திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் முன்பாக பெரியார் உருவச்சிலை அமைந்துள்ளது. கடந்த 9ம் தேதி காலை கோவை மண்டல திக இளைஞரணி செயலாளர் பிரபாகரன் என்பவர் பெரியார் படிப்பகத்துக்கு சென்றபோது, அங்குள்ள பெரியார் சிலை மீது காவிப்பொடியைத் தூவி, செருப்பு மாலை அணிவித்து மர்ம நபர்கள் அவமதித்திருந்தை பார்த்துள்ளார்.

இதையடுத்து, பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போத்தனூர் காவல்நிலையத்தில் திக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பெரியார் சிலை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் காந்திபுரத்திலும், வெள்ளலூர் திராவிட கழக அலுவலகம் முன்பும், புளியகுளம் பெரியார் சிலை முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, வெள்ளலூர் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த அருண்கார்த்திக் (26), அதே பகுதியை சேர்ந்த மொசக்கி (எ) மோகன்ராஜ் ஆகியோர் சேர்ந்து பெரியார் சிலையை அவமதித்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரும் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இரண்டு பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலி்ல் வைக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, இரண்டு பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டனர்.

x