தஞ்சாவூர் தனியார் பள்ளியை விசாரித்து டிஜிபி நடவடிக்கை எடுக்கவேண்டும்


தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் கடிதம்

தஞ்சாவூர் தனியார் பள்ளி மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த 2007-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், நாடு முழுதும் உள்ள குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, குழந்தைகளுக்கான கல்வி உரிமையை நிலைநாட்டுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரங்க் கனூங்கோ (Priyank Kanoongo) தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஜனவரி 20-ம் தேதி தங்களுக்கு வந்த புகார் ஒன்றில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கெல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரை சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தாக தெரிவித்துள்ளார். மேலும், மத மாற்றத்தை ஏற்க மறுக்கும் மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகம் உளவியல் ரீதியிலான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, அவர்களை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பள்ளியில் பயிலும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, பள்ளி நிர்வாகத்தின் மதமாற்றத்துக்கு மறுப்பு தெரிவித்ததால், அவரை வீட்டுக்கு அனுப்பாமல் கழிவறையை சுத்தம் செய்யவைத்தும் பாத்திரங்களை கழுவவைத்தும் தண்டனை வழங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில், அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தங்கள் கவனத்துக்கு வந்துள்ளதாக பிரியங்க் கனூங்கோ கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அப்பள்ளி நிர்வாகம் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் மீது உரிய விசாரணை நடத்தி குழந்தைகளின் உரிமைகளைக் காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவியரிடம் புகாரைப் பெற்று அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கையாக ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x