ஜெயங்கொண்டம் அருகே வாளி தண்ணீரில் இறந்து கிடந்த 38 நாள் குழந்தை: கொலையா என விசாரணை


அரியலூர்  உட்கோட்டை கிராமத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த குழந்தையின் பாட்டியை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போலீஸார்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை, துணியில் சுற்றப்பட்டு வாளி (பக்கெட்) தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வீரமுத்து மகள் சங்கீதா (21). இவருக்கும் கும்பகோணம் அடுத்த சுந்தரப்பெருமாள்கோயில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்(29) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 38 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பாலமுருகன் திருப்பூரில் வேலைபார்த்து வரும் நிலையில், சங்கீதா தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் இருந்து வந்தார் இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை சங்கீதா தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது, அருகில் குழந்தை காணாமல் போயிருந்தது. பதறிப்போன சங்கீதா அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.

அப்போது, குளியல் அறையில் இருந்த வாளியில் துணியால் சுற்றப்பட்ட நிலையில், தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்த நிலையில் குழந்தை கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், சங்கீதாவின் அப்பா வீரமுத்து, அம்மா ரேவதி, பெரியம்மா அனுசியா ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x