ஆந்திராவில் நேர்த்திக் கடனில் ஆட்டுக்கு பதில் மனிதரின் தலை துண்டிப்பு


ஆடுகள்

ஆந்திரவில் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் ஆட்டுக்கு பதில் ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலையை மதுபோதையில் இருந்தவர் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி அருகேயுள்ள வலசப்பள்ளியில் சங்கராந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது, ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோயிலுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான மக்கள் எல்லம்மா கோயிலுக்கு நள்ளிரவில் ஆடு, கோழிகளை பலிகொடுத்தனர்.

இந்தநிலையில், ஆடு ஒன்றை சுரேஷ் என்ற 35 வயது இளைஞர் ஒருவர் பிடித்துக் கொண்டிருந்தார். ஆடுகளை வெட்டும் பணியில் சலபதி என்பவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர் மது அருந்தி இருந்ததால் போதை மயக்கத்தில் இருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் சுரேஷ் என்பவர் பிடித்துக் கொண்டிருந்த ஆட்டை பலிகொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, போதையில் இருந்த சலபதி என்பவர் ஆடு என்று நினைத்து சுரேஷ் தலையை கத்தியால் வெட்டினார். இதில், சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக சுரேஷ் மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சுரேசுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நேர்த்திக் கடனில் ஆட்டுக்கு பதில் இளைஞர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

x