அரக்க குணம் உள்ளவர்களை திரும்பவர முடியாத உலகுக்கு அனுப்ப வேண்டும்


உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்த வழக்கில் பூ வியாபாரிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதிசெய்து, ‘‘அரக்க குணம் உள்ளவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டக்கூடாது. அவர்களை திரும்பவர முடியாத உலகிற்கு அனுப்ப வேண்டும்” என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி சாமிவேல் என்கிற ராஜா (26), கடந்த ஆண்டு வீட்டில் தனியே இருந்த 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்தார். இது தொடர்பாக ஏம்பல் போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் மற்றும் கொலைப் பிரிவின்கீழ் வழக்குப பதிவுசெய்து, சாமிவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கில் சாமிவேல் என்ற ராஜாவுக்கு தூக்கு தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் 29.12.2020-ல் தீர்ப்பளித்தது. இந்தத் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தக்கோரி, ஏம்பல் காவல் ஆய்வாளர் சார்பிலும், சாமிவேல் தரப்பில் தண்டனையை ரத்து செய்யக்கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு: “சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார் சாமிவேல் என்ற ராஜா. அவரைப் போன்றவர்களை வாழ அனுமதித்தால், அவர் சிறையில் உடன் இருக்கும் கைதிகள், குறிப்பாக விடுதலையாகும் நிலையில் உள்ள கைதிகளின் மனதைக் கண்டிப்பாகக் கெடுத்து விடுவார். அரக்க குணம் உள்ளவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டக்கூடாது. இவர்களைப் போன்றவர்களுக்கு கண்டிப்பாகத் தண்டனை வழங்க வேண்டும். அவர்களை திரும்பவர முடியாத உலகுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த வழக்கில் தூக்கு தண்டனையை உறுதிசெய்ய முதலில் தயங்கினோம். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றுகூட யோசித்தோம். அப்போது கிருஷ்ணரின் கீதாஉபதேசம்தான் நினைவுக்கு வந்தது. அதில், அர்ஜுனனிடம் எதிரிகளை அம்புகள் எய்து கொல்லாமல் இருந்தாலும் அவர்கள் என்றைக்காவது ஒருநாள் உலகைவிட்டுப் போகத்தான் போகிறார்கள் என்பார்.

மேலும், ஒருவருக்கு குறிப்பிட்ட பணி வழங்கப்பட்டிருக்கும்போது, அவர் அந்தப்பணியை பயம் இல்லாமலும், பாரபட்சம் இல்லாமலும் நிறைவேற்ற வேண்டும். அந்த வகையில் இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சரியாக விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. கீழமை நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

x