திருடச் சென்ற இடத்தில் பசி எடுக்கவே, சமையலறைக்குச் சென்ற திருடன் கிச்சடி சமைத்துச் சாப்பிட்டுள்ளான். சாப்பாடு ஜீரணிக்கும் முன்பே அவனைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர் பொதுமக்கள்.
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி மாவட்டத்தில் உள்ள ஹெங்ராபுரி என்ற பகுதியில், நள்ளிரவில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடன், அங்கிருந்த பொருட்களை வாரி சுருட்டிக்கொண்டிருந்தான். அப்போது அவனுக்குப் பசி எடுக்கவே, சமையலறைக்குள் சென்று கிச்சடி சமைத்து ருசித்துச் சாப்பிட்டுள்ளான்.
பூட்டிய வீட்டில் இருந்து சத்தம் வருவதை அறிந்த அக்கம்பக்கத்தார் சந்தேகம் அடைந்து, காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் எச்சரிக்கையான திருடன் தப்பிக்க முயன்றுள்ளான். அப்போது, அவனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து அஸ்ஸாம் காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில், “கிச்சடி உடல்நலத்துக்கு நல்லதுதான். ஆனாலும் திருட்டு வேலையில் ஈடுபடும்போது வாழ்வுக்கே தீங்கு விளைவிக்கும்” என கிண்டலாகப் பதிவிட்டதோடு, கைதான திருடனுக்கு கவுகாத்தி காவல் துறையின் ஹாட் மீல்ஸ் வழங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெட்டிசன்கள் பலர், இந்தச் சம்பவத்தைக் கண்டு மகிழ்ந்தாலும், திருட்டுச் சம்பவத்தின்போது சமைத்த அவருக்கு உணவு தேவை எனப் பதிவிட்டுள்ளனர்.