புதுச்சேரி அருகே தனியார் நிறுவனத்தில் சந்தன கட்டைகள் பதுக்கி வைப்பு: தமிழக வனத்துறை தீவிர விசாரணை 


வாகன சோதனையில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள்

புதுச்சேரி: கேரளாவில் இருந்து சேலம் வழியாக தமிழகத்துக்கு சந்தன கட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, கடந்த 3-ம் தேதி சேலத்தில் வனத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ப்போது, அவ்வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சந்தன கட்டைகள் இருப்பது கடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து 1.50 டன் எடையுள்ள ரூ.3 கோடி மதிப்பிலான சந்தன கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி வில்லியனூர் அருகே உளவாய்க்கால் பகுதியில் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு சந்தன கட்டைகள் கடத்திக் கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் சேலம் உதவி வன பாதுகாவலர் செல்வக்குமரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் நேற்று புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள உளவாயக்கால் கிராமத்தில் உள்ள அந்த வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 156 பைகளில் சந்தனத்துகள்களும், நான்கு சந்தனக்கட்டைகளும் இருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்களும் இல்லாமல் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் ஊழியர்களிடம் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நிறுவனம் அமைந்துள்ள இடம் புதுச்சேரி அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

x