கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி: மதுரை திமுக பிரமுகருக்கு போலீஸ் வலை


மதுரை: கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ரூ.12 லட்சம் மோசடி செய்த மதுரை திமுக பிரமுகரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி அருகிலுள்ள ஆர்எம்டிசி நகரைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (73). அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணி புரிந்து ஓய்வுபெற்றவர். இவர் தனது 2 மகன்களும் அரசு வேலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், வெங்கடசாமியின் உறவினர் ஒருவர் மூலம் மதுரை ஆத்திக்குளம் கிறிஸ்டி ஜீவகன் என்பவர் அறிமுகமானார்.

வெங்கடசாமியின் இரு மகன்களுக்கும் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக ஜீவகன் நம்பிக்கை அளித்தார். இதற்காக 2015-ல் ரூ.12 லட்சத்தை வெங்கடசாமி ஜீவகனுக்கு கொடுத்திருக்கிறார். அந்தப் பணத்தை வாங்கிக் கொண்ட ஜீவகன் சம்பந்தப்பட்ட கல்லூரியில் வெங்கடசாமியின் மகன்கள் பணியில் சேருவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.

இதை எடுத்துச் சென்று பணியில் சேர அவர்கள் முயன்றபோது, அது போலி நியமன ஆணைகள் எனத் தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வெங்கடசாமி, ஜீவகனிடன் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால் அவர், பணத்தைத் தராமல் இழுத்தடித்திருக்கிறார்.

இது தொடர்பாக வெங்கடசாமி கொடுத்த புகாரின் பேரில், மதுரை தல்லாகுளம் போலீஸார் , கிறிஸ்டி ஜீவகன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர். கிறிஸ்டி ஜீவகன் ஏற்கெனவே புதூர் பகுதியில் திமுக பகுதிச் செயலாளராக இருந்ததாகவும், இந்த வாய்ப்பை பயன்படுத்தியே அவர் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் வெறொரு வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஜீவகன் மீது மேலும் இரண்டு வழக்குகள் இருப்பதாகச் சொல்லும் தல்லாகுளம் போலீஸார் ஜீவகனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

x