செங்கல்பட்டு இரட்டைக்கொலை: கைதான 4 பேரில் இருவருக்கு என்கவுன்ட்டர்!


செங்கல்பட்டில் நேற்று நடைபெற்ற இரட்டைக்கொலைச் சம்பவங்கள் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நால்வரில் இருவர் போலீஸாரின் என்கவுன்ட்டர் நடவடிக்கையில் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு பழைய பேருந்துநிலையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த அப்பு கார்த்திக் என்பவரை, மர்ம கும்பல் ஒன்று நேற்று வழிமறித்து தாக்கியது. ஒரே பைக்கில் வந்த 3 பேர், நாட்டு வெடிகுண்டு வீசி அப்பு கார்த்திக்கை நிலைகுலையச் செய்து, பின்னர் அரிவாள்களால் அவரை வெட்டிச் சாய்த்தது.

பின்னர், அங்கிருந்து தப்பிய 3 மர்ம நபர்களும், நேராக மகேஷ் என்பவரின் வீட்டுக்குச் சென்றனர். அங்கே டிவி பார்த்துக்கொண்டிருந்த மகேஷை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடினர். செங்கல்பட்டில், அடுத்தடுத்து நடந்த இந்த கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின.

கொலையான அப்பு கார்த்திக், மகேஷ் இருவரும் பிரபல ரவுடிகள் என்பதால், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில், திருப்புலிவனம் பகுதியில் பதுங்கியிருந்த மர்ம கும்பலைப் போலீஸார் கைது செய்தனர். மொய்தீன், தினேஷ், ஜெசிகா, மாதவன் என ஒரு பெண் உட்பட 4 பேர் கைதுக்கு ஆளானார்கள். இவர்களில் மொய்தீன், தினேஷ் ஆகியோர் நாட்டு வெடிகுண்டு வீசித் தப்பிக்க முயன்றதால், போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் இருவரும் கொல்லப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட இருவர் மீதும் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டைக்கொலைகள், அடுத்த நாளே அதில் தொடர்புடைய இருவர் மீது போலீஸாரின் என்கவுன்ட்டர் நடவடிக்கை என செங்கல்பட்டு வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

x