ரவுடி பேபி சூர்யாவை மதுரையில் கைதுசெய்த கோவை போலீஸார்!


கைதுசெய்யப்பட்ட ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஷா எனும் சிக்கா

டிக்டாக்கில் ஆபாசமாகப் பேசிவந்த பலரும், அந்தச் செயலி உள்ளிட்ட பல்வேறு செயலிகள் தடைசெய்யப்பட்டுவிட்ட நிலையில், பிற சமூகவலைதளங்களுக்கு மாறி அதே ஆபாசத்தை அரங்கேற்றிவருகின்றனர். அவர்களில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யாவும் ஒருவர். இவர் ஆபாசமான அங்க அசைவுகளுடன் நடனமாடுவது, இரட்டை அர்த்த வார்த்தைகளைப் பேசுவது என டிக்டாக்கில் வலம் வந்தவர். டிக்டாக் தடைக்குப் பின்னர் யூடியூபில் தொடர்ந்து காணொலிகளைப் பதிவேற்றிவந்தார்.

சிக்கந்தர் ஷா எனும் சிக்காவுடன் இணைந்து ஆபாசமாகப் பேசுவது, அருவருப்பூட்டும் வகையில் நடந்துகொள்வது எனத் தொடர்ந்து யூடியூபில் காணொலிகளை வெளியிட்டுவருகிறார் சூர்யா.

இவர்கள் மீது கோவை மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் ஒரு பெண் புகார் அளித்திருந்தார். அதில் தன்னைப் பற்றி இவர்கள் இருவரும் அவதூறாகப் பேசியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ரவுடி பேபி மற்றும் சிக்கா ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவதூறாகப் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்த ஆய்வாளர் ஜெயதேவி, அதுகுறித்து விசாரித்துவந்தார்.

இந்நிலையில், சூர்யாவும் சிக்காவும் மதுரையில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்கவே, கோவையிலிருந்து மதுரைக்குச் சென்ற போலீஸார் இருவரையும் இன்று (ஜன.4) கைதுசெய்திருக்கின்றனர்.

ஆபாசப் பேச்சுக்கள் இடம்பெறும் யூடியூப் சேனல்களைத் தடைசெய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

x