திண்டுக்கல் இளைஞர் கொலை; 12 மணிநேரத்தில் குற்றவாளிகள் கைது


திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் குத்தகை எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இளைஞரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ்குமார்(26). தமது நண்பர்களுடன் நேற்று இரவு, செட்டிகுளம் அருகே குளக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த மர்ம நபர்களில் ஒருவர், அந்த இளைஞர்கள் மீது சரமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் ராகேஷ் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. ராகேஷ் உடலில் மொத்தம் 6 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தன. இதையடுத்து உடனடியாக ராகேஷை அரசு மருத்துவமனைக்கு அவரது நண்பர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ராகேஷ் உயிரிழந்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் துறை வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கிடையில் குற்றவாளிகளைப் பிடிக்க எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில் ஏஎஸ்பி அருண் கபிலன் தலைமையில் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கொண்ட 5 தனிப்படையை அமைத்தனர். மேலும் தனிப்படையினர் மரியநாதபுரம் பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மீன் குத்தகை ஏலத்தில் போட்டியாகச் செயல்பட்ட மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மரிய ஆரோக்கியதாஸ் மகன் பிரகாஷ்(36), சந்தியாகு மகன் மரியபிரபு(37), பெருமாள் மகன் ஜான்சூர்யா(27), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி(28) உள்ளிட்டோருக்குக் கொலையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்த போலீஸார், கொலைக்குப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, 2 அரிவாள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

நாட்டுத் துப்பாக்கியால் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட செட்டிக்குளம் பகுதியில், தென்மண்டல ஐஜி அன்பு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நள்ளிரவில் ராகேஷ் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த12 மணி நேரத்துக்குள் காவல் துறையினர் விரைந்து குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தொடர்புடைய நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். குற்றங்களைத் தடுக்க பல்வேறு பிரிவுகளில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

x