கடன் தொல்லையா- ஆன்லைன் சூதாட்டமா?: குடும்பமே மரித்த சோகம்


மணிகண்டன் - தாரா குடும்பத்தினர்

சென்னை பெருங்குடியில் அடுக்ககம் ஒன்றில் வசித்து வந்த, முன்னாள் தனியார் வங்கி அதிகாரி மற்றும் அவரது மனைவி, 2 மகன்கள் ஆகியோர் இன்று(ஜன.2) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

போரூரில் தனியார் வங்கியில் பணியாற்றுவதற்காக மணிகண்டன் என்பவர் தனது மனைவி தாரா மற்றும் 2 மகன்களுடன் 6 மாதம் முன்பாக பெருங்குடி அடுக்ககத்தில் குடிவந்திருக்கிறார். கோவை பகுதியை சேர்ந்த மணிகண்டன், முன்னதாக அமெரிக்காவில் பணியாற்றி திரும்பியவராம்.

பெருங்குடியில் குடியேறிய 3 மாதங்களில் மணிகண்டனின் வேலை பறிபோயிருக்கிறது. தொடர்ந்து கடன்களையும் நிறைய வாங்கியிருக்கிறார். மாதக்கணக்கில் மணிகண்டன் வேலைக்கு செல்லாததுடன், சுமார் ஒரு கோடி வரை கடன் வாங்கியதுமாக, மணிகண்டனுக்கும் மனைவி தரங்கபிரியா என்கிற தாராவுக்கும் அடிக்கடி வீட்டில் சச்சரவு எழுந்துள்ளது.

அந்த வகையில் நேற்றும் நீண்ட நேரம் சண்டை தொடர்ந்துள்ளது. திடீரென அந்த வீடு நிசப்தத்தில் ஆழ்ந்ததுடன், காலையில் கதவு திறக்கப்படாது இருந்ததாம். மணிகண்டனை தேடி வந்த சிலர் அவரை நீண்ட நேரமாக அலைபேசியில் அழைத்து எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். இதனையடுத்து அடுக்ககம் சார்பில் காவல்துறைக்கு தகவல் போனது. போலீஸார் முன்னிலையில் வீட்டினுள் சென்று பார்த்தபோது மணிகண்டன் -தாரா தம்பதியர் மற்றும் அவர்களது 2 மகன்கள் ஆகியோர் இறந்து கிடந்துள்ளனர்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கிரிக்கெட் மட்டையால் மனைவி தாராவை மணிகண்டன் அடித்து கொன்றிருப்பதும், பின்னர் 10 வயது தரண் மற்றும் ஒன்றரை வயது தாகன் என 2 மகன்களையும் மூச்சடக்கி கொன்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. கடைசியாக மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

மணிகண்டனின் செல்போனை போலீஸார் ஆய்வுக்கு உட்படுத்தியதில், பணம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டங்களுக்கான செயலிகள் அதில் இருந்ததும், அவற்றை மணிகண்டன் அடிக்கடி கையாண்டதும் தெரிய வந்தது. அதே போல, வேலைக்கு செல்லாது நிறைய கடன் வாங்கியதும் அவை தொடர்பான நெருக்கடிகளும், குடும்பத்தில் நேரிட்ட சச்சரவுகளும் மணிகண்டனின் மோசமான முடிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அண்டை அயலில் விசாரித்த வகையிலும் இந்த தகவல்களே தெரிய வந்துள்ளன. கடன் தொல்லையா, ஆன்லைன் விளையாட்டுகளா, குடும்ப சச்சரவா அல்லது இவையனைத்துமா என்பது காவல்துறை விசாரணையின் முடிவில் தெரிய வரும்.

கணவன் மனைவி இருவருமே மெத்தப் படித்திருந்ததும், மணிகண்டன் மட்டுமே ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. அதே போன்ற வங்கி உயர் பதவியில் மனைவி தாராவும் பணியாற்றி வந்திருக்கிறார் என்றும், இரண்டாவது குழந்தை பிரசவம் மற்றும் வளர்ப்புகாக பணியை துறந்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தம்பதி வசித்த அடுக்கக வீட்டுக்கான மாத வாடகை மட்டுமே ரூ.30 ஆயிரமாம். அவர்களது படிப்பும், பணியும், செழிப்பும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு உதவ முடியாது போனது பெரும் சோகம்.

x