என் கணவர், மாமியாரால் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் அச்சுறுத்தல்!


ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி

தனது கணவரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் தனது மாமியாருமான திலகவதியும் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுருதி திலக் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் கூறியுள்ளதாவது: ‘ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான திலகவதியின் மகன் பிரபுதிலக்குக்கும் எனக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று, எங்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். சில நாட்களிலேயே எனது கணவரும், மாமியாரும் சேர்ந்து பல காரணங்களுக்காக என்னை அடித்துக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்கள். குழந்தைகளுக்காக அதைப் பொறுத்துக்கொண்டேன்.

கடந்த 2016-ம் ஆண்டு பிரபு திலக், பாண்டிச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மாமியார் திலகவதியின் செல்வாக்கால் வெளியே கொண்டு வரப்பட்டார். இதன்பிறகு, சினிமா எடுக்கிறேன் என்று போனவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 5-ம் தேதி, குடும்ப விஷயம் தொடர்பாக எனக்கும் என் கணவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தின் போது என்னை முகத்திலும் தலையிலும் காயப்படும்படி அடித்தார். மாமியார் இதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை. எனது நிலைமையைப் பார்த்துவிட்டு என் பிள்ளைகள் துடித்துப் போனார்கள். உடனே 100-க்கு போன் செய்ததால், போலீஸார் வந்து என்னைக் காப்பாற்றினார்கள்.

அப்போது மன்னிப்புக் கேட்ட பிரபு, அதன்பிறகும் திருந்தவில்லை. என்னை வெளியே போகவிடாமல் வீட்டுக்குள் அடைத்துவைத்து தொடர்ந்து என் கணவரும் எனது மாமியாரும் என்னை அடித்து துன்புறுத்துவதால், என் பிள்ளைகள் மனரீதியாக பாதிப்படைந்துள்ளனர்.

இதனால் நானும் என் பிள்ளைகளும் டிசம்பர் 29-ம் தேதி அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு தப்பி வெளியே வந்து விட்டோம். அதனால் எனக்கும் பிள்ளைகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால், காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’

இவ்வாறு தனது புகாரில் தெரிவித்துள்ளார் சுருதி திலக். இந்த மனுவை முதல்வர் தனிப்பிரிவுக்கும் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

x