பெண் குரல் வழிசல், செல்போன் ஹேக்கிங், பிளாக்மெயில்: நெறிதவறிய நரேந்திரன்


ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன். வேலூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவரான இவருக்கு, மென்பொருள் ஆராய்ச்சியில் அதீத ஈடுபாடு உண்டு. ஆனால், அந்த ஆர்வத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால் தற்போது கைதாகி இருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பல்வேறு பெண்களின் பெயரில் போலி கணக்குகளில் உலா வரும் நரேந்திரன், அங்கே சிக்கும் சபல ஆண்களை வளைப்பார். அவர்களின் அலைபேசி எண்ணைப் பெற்று அவர்களிடம் பெண் குரலில் வழிவார். அதன் பிறகு நரேந்திரன் அனுப்பும் ஒரு செய்தியை அவர்கள் திறந்ததும், ஊடுருவும் மால்வேர்கள் மூலமாக செல்போனை முழுவதுமாக ஹேக் செய்வார்.

அந்தரங்க படங்கள் வீடியோக்கள், தொடர்பில் உள்ளோர் எண்கள், இமெயில் முகவரிகள், அதிலுள்ள தகவல்கள் என சகலத்தையும் துழாவி, தனக்கான தரவுகளைச் சேகரிப்பார். அப்படிக் கிடைக்கும் படங்கள் அல்லது தகவல்களை வைத்து, வேறு அடையாளத்திலிருந்து அவர்களை பிளாக்மெயில் செய்து மிரட்டுவார். இந்த ஹேக்கிங் மூலம் அப்படி ஏதும் கிடைக்காது போனால், அடுத்தகட்ட முயற்சியில் இறங்குவார்.

அதன்படி பெண் குரலில் பேசி பெண்களின் ஆபாச வீடியோக்களை அனுப்பி, அதே போன்று எதிர்முனை ஆண்களின் முற்றும் துறந்த படங்களைப் பெறுவார். பின்னர் பிறிதொரு அடையாளத்திலிருந்து, அவர்களை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பார். இந்தத் தகவல் தொழில்நுட்ப மிரட்டல்களை கரோனா காலத்தில் தீவிரமாகச் செயல்படுத்தி, பல லட்சங்களை பறித்திருக்கிறார். இதில் பலமுறை பணத்தை பறிகொடுத்து, அப்போதும் மிரட்டல் தொடர்ந்ததில் வெறுத்துப்போன, திருவள்ளூர் மாவட்டம், பெருமத்தூரைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரை நாடினார்.

மாவட்ட எஸ்பி வருண்குமாரும் இந்த வழக்கை ஆராய, நரேந்திரனை அவரது பாணியிலேயே சைபர் கிரைம் போலீஸார் பொறிவைத்துப் பிடித்துள்ளனர். ஒரு பொறியியல் மாணவர், தனது மிதமிஞ்சிய துறை அறிவை அழிவுப் பாதையில் செலவிட்டதில், இப்போது கம்பி எண்ணுவதற்குத் தயாராகி வருகிறார்.

x