மண்டைய மறைச்சியே... கொண்டைய மறைச்சியா..?


தடயவியல் நிபுணர் சோதனை

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் (50). திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அரவிந்த்துக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்தது. பேரக்குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக மணிமாறன், மனைவி பிரேமாவுடன் நந்தவனப்பட்டியில் உள்ள தன்னுடைய மகன் வீட்டிலேயே தங்கினார். அவ்வப்போது தங்கள் வீட்டுக்கு வந்து சுத்தம் செய்துவிட்டுச் செல்வதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை மணிமாறன் வீட்டில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் கரும்புகை வரவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். உடனே மணிமாறன், தன் மகனுடன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்கள் எல்லாம் தீயில் எரிந்து கொண்டிருந்தன. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினார்கள். அப்போது பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் இருந்த 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

2 மாதங்களாக வீட்டில் ஆள் இல்லாததைக் கண்காணித்துவந்த கொள்ளையர்கள், பைப் வழியாக வீட்டுக்குள் இறங்கி கதவை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கைரேகை உள்ளிட்ட தடயங்களை அழிக்கும் முயற்சியாக மேஜை, நாற்காலி, பீரோ, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து எரித்துள்ளதும் தெரியவந்தது. இதில் பீரோவில் இருந்த பட்டுச் சேலைகள், முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவையும் எரிந்து சாம்பலாயின. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் என்று புகாரில் தெரிவித்துள்ளார் மணிமாறன்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த திண்டுக்கல் வடக்கு போலீஸார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தினார்கள். அப்போது, வீட்டருகே செல்போன் ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. அது கொள்ளையர்கள் தவறவிட்டுச் சென்றதாக இருந்தால், விரைவிலேயே அவர்களைப் பிடிக்க முடியும் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

"மண்டைய மறைச்சியே, கொண்டைய மறைச்சியா?" என்ற வடிவேலு காமெடி போல மற்ற தடயங்களை மறைப்பதற்காக வீட்டிற்கே தீவைத்த கொள்ளையர்கள், கடைசியில் தங்கள் செல்போனைத் தவறவிட்டிருப்பது திண்டுக்கல் போலீஸாரை சீரியஸை மறந்து சிரிக்க வைத்திருக்கிறது.

x