சிறுமிக்கு பாலியல் தொல்லை: உறவினருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை @ சென்னை 


சென்னை: சென்னை புரசைவாக்கம் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உறவினருக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களது இரு மைனர் பெண் குழந்தைகளும் தந்தையுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2017 ஆகஸ்ட் 17-ம் தேதி, 15 வயதான சிறுமியை அவரது உறவினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உறவினரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தவழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உறவினருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

x