சிபிஐ அலுவலகத்தில் கறுப்பாடு கைது!


தேசத்தின் உயரிய புலனாய்வு அமைப்பான சிபிஐ, தனது அலுவலக ஊழியர் ஒருவரை நேற்று(டிச.28) கைது செய்துள்ளது.

மும்பை ஊழல் எதிர்ப்புக் கிளையில், எழுத்தராகப் பணியாற்றுபவர் சுமீத் குமார். சிபிஐ தயார் செய்த ஆவணம் ஒன்றில் உயரதிகாரிகளின் பெயரில், போலியான குறிப்புகளை இவர் பதிவு செய்திருந்தது டிச.21 அன்று கண்டறியப்பட்டது.

நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றுக்காக அளிக்க வேண்டிய ஆவணங்களை, சிபிஐ உயரதிகாரிகள் சரிபார்த்தபோது இந்த முறைகேடு வெளிப்பட்டது. நடப்பு விசாரணையிலிருக்கும் வழக்கொன்றின் கைது தொடர்பாக பரிசீலிக்கும்படி, எஸ்பி தகுதியிலான உயரதிகாரி குறிப்பு எழுதியதாகவும், டிஐஜி அதிகாரி அதை அனுமதித்ததாகவும் அந்த போலி ஆவணக் குறிப்புகள் அடையாளம் காணப்பட்டன.

சிபிஐ அலுவலகத்தின் உள்ளேயே கறுப்பாடு இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் சென்றதும், இரவு நெடுக ஆராய்ந்து பல்வேறு அலுவலர்களின் கையெழுத்தை ஒப்பிட்டனர். கடைசியில், மும்பை ஊழல் எதிர்ப்பு அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றும் சுமீத் குமாரை அடையாளம் கண்டனர். அலுவலத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி பதிவுகளை வைத்து சுமீத்துக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதி செய்தனர்.

இண்டியா புல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநரான சமீர் கெலாட் என்பவரிடம் ஆதாயம் பெறுவதற்காக, அந்த நிறுவனத்துக்காகப் பணியாற்றும் மோஹித் குமார் என்பவரின் தூண்டுதலின்பேரில், சுமீத்குமார் இந்த முறைகேட்டைச் செய்திருப்பது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து சிபிஐ அலுவலகத்தில் பணியாற்றும் சுமித்குமாரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் கையாண்ட இதர கோப்புகளையும் சரிபார்த்து வருகின்றனர்.

x