கஞ்சா, குட்கா,லாட்டரி: தமிழக போலீஸாரின் மாபெரும் வேட்டை


டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி உள்ளிட்டவற்றை கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களை, தமிழக போலீஸார் வளைத்து கைது செய்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களிடமிருந்து அதிகளவு தடை செய்யப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் நெடுக டிச.6 அன்று தொடங்கிய இந்த வேட்டையில் பெருமளவு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருப்பதாகவும், மொத்தம் 6,623 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது. கஞ்சாவை குறிவைத்து நடத்தப்பட்ட ’ஆபரேஷன் கஞ்சா வேட்டை’ நடவடிக்கையில் மட்டும், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 871 பேர் கைதாகி உள்ளனர். கஞ்சா மட்டுமன்றி தமிழக குற்ற வரலாற்றில் இதுவரையில்லாத அளவுக்கு 23 கிலோ ஹெராயினை தூத்துக்குடியில் கைப்பற்றி உள்ளனர்.

இதுதவிர குட்கா கடத்தலில் ஈடுபட்ட 5037 பேரும், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 1091 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து பல லட்சம் பெருமானமுள்ள தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, லாட்டரிகள் தொடர்பாக கடத்தல், விற்பனை, பதுக்கலில் எவரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. அவ்வாறானவர்கள் குறித்து 10581 என்ற பிரத்யேக எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது 9498410581 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ புகார் தொிவிக்கலாம். வழக்கமான 100, 112 ஆகிய அவசர உதவி எண்களை தொடர்புகொண்டும் தகவல் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் பல்வேறு குற்றச்செயல்களுக்கும் அடிப்படையாக, போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட லாட்டரி வர்த்தகம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு முன்னதாக உத்தரவிட்டிருந்தார். கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், தொடர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது குண்டர் தடுப்பு பிரிவின் கீழ் சிறையிலடைக்க பரிந்துரை செய்யவும் முடிவாகி உள்ளது. மேலும் சில தினங்களுக்கு இந்த வேட்டை நடவடிக்கை தொடரும் எனவும் தெரிகிறது.

x