பாலியல் தொல்லை புகாரில் பழனி ஆசிரியர் போக்சோவில் கைது


திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டி அருகில் உள்ளது வேலூர். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் அகமது ரபி. இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக பெற்றோர் சார்பில் கல்வித் துறை உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கபட்டது.

பள்ளி வளாகத்தில் உயரதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் மாணவிகளின் புகார் உறுதியானது. இதையடுத்து அகமது ரபி மீது துறைசார் நடவடிக்கையாக, அவர் பணியிடை நீக்கத்துக்கு ஆளானார். மேலும், சம்பவம் தொடர்பாக காவல் துறையிலும் பெற்றோர் புகாரளித்தனர். இதன் அடிப்படையில் ஆசிரியர் அகமது ரபியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர்.

அன்றாட பெட்ரோல், டீசல் விலை நிலவரம் போல, தினசரி போக்சோவில் பள்ளி ஆசிரியர்கள் கைதாவது வாடிக்கையாகி வருகிறது. நமது கல்வி நிலையங்களையும் அதன் செயல்பாட்டையும், நோக்கங்களையும் இந்த போக்சோ கைதுகள் கேள்விக்குள்ளாகின்றன. இந்தப் போக்கு எங்கே சென்று முடியுமென தெரியவில்லை. களையெடுப்பு போல ஒவ்வொரு பள்ளியாக கறைபடிந்த ஆசிரியர்கள் கைதாகும் வரை காத்திருக்க வேண்டுமா? பள்ளிகளில் எப்படிப் புல்லுருவி போல போக்சோ குற்றவாளிகள் ஒளிந்திருக்கிறார்கள்? இதற்கு பள்ளிக் கல்வித் துறை எப்படி முடிவு காணப்போகிறது?

கல்வி நிலையங்களின் முன்னே காத்திருக்கும் நிஜமான சவால்கள் பின்தள்ளப்பட்டு, இம்மாதிரி போக்சோ கைதுகள் தினசரி அரங்கேறுவது கவலைக்குரியது. இந்தப் பிரச்சினைகளை முறையாகக் கையாளவும், முடிவுக்கு கொண்டுவரவும் பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும். இதன் மறுபக்க பாதிப்பாக, அர்ப்பணிப்பும், கண்டிப்பும் கொண்ட ஆசிரியர்கள் தங்கள் பள்ளிச் செயல்பாடுகளில் தொய்வு காணவும் வாய்ப்பாகி விடும். பள்ளி மாணவ மாணவியர், பெற்றோர், உள்ளூரார் என சகலருக்கும் அஞ்சி உண்மையான உதாரண ஆசிரியர்களும் தங்கள் கடமையிலிருந்து பின்வாங்க நேரிடும்.

தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுப்பது, பள்ளிசெயல்பாடுகளை முழுமையாகக் கண்காணிப்பது, முறைகேடான வழிகளில் ஆசிரியர் பணிகளில் சேர்வதைத் தடுத்து நிறுத்துவது, பள்ளிப் பிள்ளைகள், பெற்றோருக்கு மேலும் விழிப்புணர்வு வழங்குவது, கல்வித் துறை உயரதிகாரிகள் ஆய்வுபோல குழந்தைப் பாதுகாப்பு அலுவலர்களையும் பள்ளிகளின் ஆய்வுக்கு அனுப்புவது உட்பட இன்னும் பலவற்றை பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நமது பள்ளிகள், அவற்றின் உண்மையான இலக்குகளை நோக்கி திரும்புவது விரைவில் அரங்கேறட்டும்.

x