கஞ்சா விற்ற போலி சாமியார் கூட்டாளிகளுடன் கைது


போலி சாமியார் தாமு கூட்டாளிகளுடன்...

சென்னையில் பக்தர்களுக்கு குறி சொல்வதுபோல் கஞ்சா விற்றுவந்த போலி சாமியார், கூட்டாளிகள் இருவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை, மைலாப்பூர், ஐஸ்ஹவுஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சாமியார் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், மைலாப்பூர் தனிப்படை போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, ஐஸ்ஹவுஸ் பகுதியில் காவி உடையில் ருத்ராட்ச மாலை அணிந்த சாமியார் ஒருவரைச் சுற்றி, இளைஞர் கூட்டம் நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த போலீஸார் அருகில் சென்று நோட்டமிட்டபோது, அந்த சாமியார் சிறிய பொட்டலங்களை விநியோகம் செய்து வந்ததைப் பார்த்தனர். இதையடுத்து போலீஸார், அவரிடம் கஞ்சா வாங்குவதுபோல் நடித்து சுற்றிவளைத்துப் பிடித்து சோதனை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

சோதனையில் அந்தச் சாமியாரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்தச் சாமியாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ராயப்பேட்டை யானைக்குளம் பகுதியைச் சேர்ந்த தாமு@சேகர்(50) என்பதும், போலீஸாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சாமியார் வேடத்தில் பொதுமக்களுக்கு குறி சொல்வதாகக் கூறி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

போலீஸார் தாமு வீட்டில் சோதனை நடத்தி, பூஜை அறையில் மறைத்து வைத்திருந்த மேலும் 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தாமு அளித்த தகவலின் பேரில், அவரது கூட்டாளிகளான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா(54), மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆசைத்தம்பி(41) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, தங்க மோதிரம், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட ராஜா, ஆசைத்தம்பி இருவரும் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து போலி சாமியாரான தாமுவிடம் கொடுத்து, மைலாப்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

x