நகைக்காகச் சிறுமியைக் கொன்ற குடும்ப நண்பர்


கோவையில், 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை நகைக்காக கொலைசெய்த குடும்ப நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை, சரவணம்பட்டி மாருதி நகரில் உள்ள முட்புதரிலிருந்து நேற்று முன்தினம் காலை துர்நாற்றம் வீசியது. அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது சாக்கு மூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்டு, கம்பளியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் பிணம் கிடப்பது தெரியவந்தது. உடனே போலீஸுக்கு தகவல் தந்தனர்.

சரவணம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சாக்குமூட்டையை பிரித்துப் பார்த்தனர். அதில் ஒரு சிறுமியின் பிணம் அழுகிய நிலையில் இருந்தது. பின்னர், அந்தச் சிறுமி யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர். மேலும் அந்தப் பகுதியில் சிறுமி காணாமல்போனது தொடர்பாக வந்த புகார்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்தப் பகுதியிலேயே கணவரைப் பிரிந்து 2 மகள்களுடன் வசித்துவரும் கலைவாணி என்பவர், 10-ம் வகுப்பு படிக்கும் தனது 15 வயது மகளைக் கடந்த 11-ம் தேதி முதல் காணவில்லை என்று புகார் கொடுத்திருப்பது தெரியவந்தது. அங்குவந்த கலைவாணி, இறந்து கிடப்பது தனது மகள்தான் என்று அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனர்

இவ்வழக்கு தொடர்பாக இன்று போலீஸார், கலைவாணியின் குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சிறுமியை வீட்டுக்கு வரவழைத்த முத்துக்குமார் நகைக்காக அவரைக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது கை, கால்களை கட்டி சாக்கு மூட்டையில் கம்பளியால் சுற்றி குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார் என்று தெரியவந்தது. முத்துக்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நகைக்காக குடும்ப நண்பரே சிறுமியைக் கொலை செய்திருப்பது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் முத்துக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x