மனைவிக்கு தாலி பிரித்துக் கோக்க செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது


யோகேஷ்

திருமணமாகி 2 மாதத்தில் மனைவிக்கு தாலி பிரித்துக் கோக்க பணமில்லாததால், செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணி(57), அண்ணாநகர் பகுதியில் தங்கி வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகள் புவனேஸ்வரி(26) அதேபகுதியில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வருகின்றார். கடந்த 7-ம் தேதி புவனேஸ்வரி வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு, அண்ணாநகர் ‘ஏஏ’ பிளாக் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், புவனேஸ்வரி கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து அந்தப் பகுதியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் உடை அணிந்த இளைஞர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த யோகேஷ்(29) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், யோகேஷ் பகல் நேரங்களில் தனியார் அலுவலகங்களில் உதவியாளராகவும், இரவில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்துவந்ததும் தெரியவந்தது.

மேலும் கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் யோகேஷுக்கு திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், சரியான வருமானம் இல்லாததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மனைவிக்கு தாலி பிரித்து கோக்கும் நிகழ்வுக்கு புதுத் தாலி வாங்க, யோகேஷ் பலரிடம் கடனாகப் பணம் கேட்டுள்ளார். பணம் கிடைக்காததால், செயின் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

x