கடந்த 10 ஆண்டுகளில் 8 வழக்கில் மட்டும் தண்டனை?


தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்கள் அடிக்கடி எழுந்துவரும் நிலையில் அதற்காக ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட வழக்குகளில் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது, தமிழகத்தில் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நில அபகரிப்பு பிரிவுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகளுக்கு 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு மீண்டும் செயல்படத் தொடங்கியது. அதன் அடிப்படையில் 2012 முதல் 2021 நவம்பர் வரை, தமிழகம் முழுதும் நில அபகரிப்பு தொடர்பாக 1,78,251 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் 4,461 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு 1,782 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட வழக்குகளில், சென்னை, வேலூரில் தலா 2 வழக்குகளும், நாகப்பட்டினம், தருமபுரி, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்கு என மொத்தமாக 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 1,621 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 994 வழக்குகள் தொடர்ந்து விசாரணை நிலையிலேயே இருப்பதாகவும், 4,061 புகார்கள் வழக்குப் பதிவு செய்யப்படாமல் முதற்கட்ட விசாரணையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான மற்றொரு வழக்கில், நில அபகரிப்புக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திலிருந்து வழக்குகளை விரைந்து முடிக்கவும், மற்ற நீதிமன்றங்களுக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில், தற்போது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பதிவுசெய்த நில அபகரிப்பு தொடர்பான 595 வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்காக நிலுவையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

x