வேலூர் ஜோஸ் ஆலுக்காஸில் 35 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை


வேலூர் மாவட்டம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவரைத் துளையிட்டு சுமார் 35 கிலோ தங்க, வைர நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்ற முகமூடி கொள்ளையரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் பகுதியில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று(டிச.14) இரவு 10 மணிக்குப் பிறகு கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அதன்பிறகு இரவு காவலர்கள் இருவர் பணியில் இருந்துள்ளனர்.

இன்று காலை கடையைத் திறந்துபோது, கடையின் பின்பக்கச் சுவர் துளையிடப்பட்டு முதல் தளத்தில் இருந்த நகைகள் கொள்ளைபோய் இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, வேலூர் வடக்கு போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் திருடுபோன இடத்தைப் பார்வையிட்டு, சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கடையின் பின்பக்க வெண்டிலேட்டர் குழாய் மூலம் புகுந்து பால் சீலிங்கை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், முதல் தளத்துக்கு வந்ததைக் கண்டுபிடித்த போலீஸார், கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற திசை குறித்து அறிய மோப்ப நாய் சிம்பாவை வரவழைத்தனர். கடையின் பின்புறம் இருந்து கால்வாய் வழியாக சுமார் ஒரு கி.மீ தூரம் சென்ற சிம்பா, வேலூர் பழைய பஸ் சாலைக்கு அருகில் நின்றுவிட்டது.

சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வேலூர் மாநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை குறித்த தடயங்கள் கைரேகை நிபுணர் குழு உதவியுடனும் சேகரிக்கப்பட்டுள்ளன.

கடையில் உள்ள நகைகள் கணக்கிடப்பட்டதில் சுமார் 35 கிலோ தங்க, வெள்ளி நகைகள் கொள்ளை போயுள்ளன என்று மாலையில்தான் தெரியவந்துள்ளது. நகைக் கடையில் உள்ள சிசிடிவி கேமிராக்கள், வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

கடையில் உள்ள சிசிடிவி கேமராவின் மீது ஸ்பிரே தெளித்திருந்தாலும், இதன் மூலம் தெரியும் முகமூடி அணிந்த கொள்ளையர் உருவங்கள் ஓரளவுக்கு தெளிவாகக் காணப்படுவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்துள்ளதாகவும், விரைவில் கொள்ளையர்களைப் பிடித்துவிடுவோம் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

x