திருட்டு பைக் பிடிபட்டதால் விஷம் குடித்தாரா மணிகண்டன்?


மாணவர் மணிகண்டன், டிஜிபி தாமரைக்கண்ணன்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவலில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற கல்லூரி மாணவன் மணிகண்டனை போலீஸார் பிடித்து கீழத்தூவல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இரவில் வீடு திரும்பிய மணிகண்டன், மறுநாள் காலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார். போலீஸார் தாக்கியதால்தான் மணிகண்டன் இறந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக கூடுதல் போலீஸ் டிஜிபி தாமரைக்கண்ணன் இன்று மதுரையில் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கீழத்தூவல் காவல் நிலையத்துக்கு கடந்த 4-ம் தேதி அழைத்து வரப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழந்தது தொடர்பாக, சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவின. இதன் உண்மை நிலை குறித்து ஆராயப்பட்டது. 4-ம் தேதி மாலை கீழத்தூவல் பகுதியில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, மணிகண்டனும் அவருடன் மற்றொரு நபரும் பைக்கில் வந்துள்ளனர். நிறுத்தாமல் சென்ற அவர்களைப் போலீஸார் பின்தொடர்ந்தபோது, மணிகண்டனுடன் வந்த நபர் இறங்கித் தப்பினார். மணிகண்டனை போலீஸார் பிடித்துள்ளனர். பின்னர், பைக்குடன் அவரை கீழத்தூவல் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அவரது பைக்குக்கு உரிய ஆவணம் ஏதுமில்லை என்று தெரியவந்திருக்கிறது. இருப்பினும் கல்லூரி மாணவர் என்பதால், இரவு 7.30 மணிக்கு மொபைல் மூலம் அவரது தாயாரை காவல் நிலையத்துக்கு போலீஸார் வரவழைத்துள்ளனர். அங்கு வந்த அவரது தாயார் மற்றும் உறவினருடன் மணிகண்டனை 8.15 மணிக்கு வீட்டுக்கு நல்ல முறையில் அனுப்பி வைத்துள்ளனர்.

இவை அனைத்தும் காவல் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இருப்பினும், அதிகாலை 2 மணிக்கு மணிகண்டன் இறந்தது தெரியவந்தது. அவர் ஆம்புலன்சில் வரும்போதே இறந்ததற்கான தகவலும் உள்ளது. ஆனாலும், அவரது தம்பி அலெக்ஸ் பாண்டியன் மறுநாள் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், காவல் துறையினர் தாக்கியதில் மணிகண்டன் இறந்ததாகக் கூறியிருந்தார்.

காவல் துறையினர் மீது புகார் எழுந்ததால் டிஎஸ்பி, பரமக்குடி ஆர்டிஓ அளவில் விசாரிக்கப்பட்டது. 5-ம் தேதி 2 மருத்துவர்கள் மற்றும் மாணவரின் குடும்பத்தினர் சார்பில், ஒரு மருத்துவர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது; வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாணவரின் குடும்பத்தினருக்கு திருப்தி இல்லாததால், உயர் நீதிமன்றம் மதுரை கிளையை அணுகினர். நீதிமன்ற உத்தரவின்பேரில், தடய அறிவியல் நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் 8-ம் தேதி மறு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதுவும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணிகண்டன் உடலில் சேகரித்த உறுப்புகளை தடய அறிவியல் குழுவினர் ஆய்வு செய்து இறுதி அறிக்கை வழங்கியிருக்கிறார்கள். இதன்மூலம் மாணவர் மணிகண்டன் விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. காவல் துறையினர் தாக்கியோ, அடித்தோ அவர் உயிரிழக்கவில்லை என்பதும் தெரிந்தது.

இதுபற்றி மணிகண்டன் குடும்பத்தினருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். எதற்காக அவர் விஷம் குடித்தார்? அவருடன் வந்து தப்பிய நபர் யார்? போன்ற பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரிக்கிறோம். மணிகண்டன் பயன்படுத்திய பைக் திருடப்பட்டது என்பதால், அது பற்றியும் விசாரிக்கப்படுகிறது. முழு விசாரணையும் முடிந்த பின்னரே ஒரு முடிவுக்கு வரமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, தென்மண்டல ஐஜி அன்பு, ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன், மதுரை எஸ்பி கார்த்திக், மதுரை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

x