போதை ஸ்டாம்ப் விற்பனை; கல்லூரி மாணவர்கள் கைது


கைதான டேனியல் ஜேக்கப், தனுஷ்

கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் போதை ஸ்டாம்புகளை விற்றதாக, சென்னையில் 2 கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கண்காணித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதன்பேரில், கடந்த 5 நாட்களாக காவல் துறையினர் தமிழகம் முழுதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று(டிச.10) கொரட்டூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரைப் பிடித்து சோதனை நடத்தினர். அந்த இளைஞரிடம் 2 போதை ஸ்டாம்புகள் மற்றும் 1 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூரைச் சேர்ந்த தனுஷ்(25) என்பதும், மணப்பாக்கத்தில் தங்கி, தாம்பரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

அடுத்து தனுஷ் அளித்த தகவலின் பேரில், கொரட்டூர் வெங்கடராமன் நகரில் தங்கியிருந்த கல்லூரி மாணவர் டேனியல் ஜேக்கப்(21) என்பவரிடமிருந்து 48 போதை ஸ்டாம்புகளைப் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வரும் டேனியல் ஜேக்கப், போதை ஸ்டாம்புகளை வாங்கி தனுஷிடம் கொடுத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸார், போதை ஸ்டாம்புகளை யாரிடமிருந்து வாங்கினார்கள், இதன் பின்னணியில் உள்ளது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x