ஓடும் பேருந்தில் பாலியல் தொந்தரவு: ஓட்டுநர், நடத்துநர் கைது


சித்தரிப்பு

பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக, அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசுப் பேருந்தில், நேற்று(டிச.9) இரவு குறிப்பிட்ட ஊருக்குச் செல்வதற்காக கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். இரவுப் பயணம் என்பதால், பேருந்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் பயணிகள் இருந்தனர். அடுத்தடுத்த நிறுத்தங்களில் அவர்களும் இறங்கிவிட, தனியாகப் பயணித்த மாணவியிடம் பேருந்தின் நடத்துநரான சிலம்பரசன் பாலியல் தொந்தரவு தந்துள்ளார். இதனால் பீதியடைந்த அப்பெண், தனது கணவருக்கு செல்போனில் தகவல் தந்திருக்கிறார். மாணவி இறங்க வேண்டிய நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் கடக்கவே, அப்பெண் ஓடும் பேருந்திலிருந்து குதித்து தப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து தனது உறவினர்களுடன், நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக விசாரணை நடத்திய காணை போலீஸார் நடத்துநர் சிலம்பரசனை கைது செய்தனர். சிலம்பரசனிடம் மேற்கொண்ட விசாரணையில், மாணவி மீதான பாலியல் அத்துமீறலுக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக அரசுப் பேருந்தின் ஓட்டுநரான அன்புச்செல்வன் என்பவரும் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்து, துறை ரீதியிலான நடவடிக்கையாக இருவரையும் இடைநீக்கம் செய்து மண்டல போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஓடும் பேருந்தில் தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொந்தரவை, துணிச்சலாக காவல் நிலையம்வரை எடுத்துச்சென்ற மாணவிக்கு போலீஸார் பாராட்டு தெரிவித்தனர்.

பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்கள் அவற்றை வெளியில் சொல்லாததும், காவல் துறையில் புகார் கொடுக்க முன்வராததுமே குற்றவாளிகள் தப்பிக்கவும், அதுபோன்ற குற்றங்கள் தொடரவும் காரணமாகிறது. இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் தனிப்பட்ட வகையில் உள்ளுக்குள் ஒடுங்கிப்போவதால் மனதளவில் அழுத்தத்துக்கும், விரக்திக்கும் ஆளாகிறார்கள். இதுவே, பக்குவம் வாய்க்கப்பெறாத மாணவிகளை தவறாக முடிவெடுக்கவும் தூண்டுகிறது.

மாறாக, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குற்றவாளிகளாக முன்னிறுத்தும் போக்கு அதிகரிக்க வேண்டும். அதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகாரளிப்பதும் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் பாலியல் குற்றவாளிகள் சட்டத்தின் முன்பாகவும், பொதுவெளியிலும் அம்பலப்படுவதுடன், அவர்களின் குற்றச்செயல்கள் தொடராது தடுக்கவும் முடியும். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்டதாக கருதும் அநீதிக்கு, இந்த வகையில் விடியல் தேடவும் முடியும்.

x