சிபிஐ அலுவலகத்தில் ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை


சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், கடந்த 2019-ம் ஆண்டு நவ.9-ம் தேதி ஐஐடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்த நிலையில், இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஐஐடி பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன், ஹேமசந்திரன்தாரா உள்ளிட்ட 3 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் பெரும்சர்ச்சைக்குள்ளான இந்த வழக்கு, 2019 டிசம்பரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174-ன் கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவுசெய்து விசாரணை ஆரம்பமானது.

தனது தற்கொலைக்கு காரணமாக மாணவி தனது செல்போன் மற்றும் லேப்டாப்களில் பல்வேறு குறிப்புகளைப் பதிவுசெய்து வைத்திருந்ததை, சிபிஐ சைபர் ஆய்வகத்தில் ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் சிபிஐ அனுப்பியிருந்த சம்மனை ஏற்று இன்று(டிச.7) காலை, சென்னை பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

மாணவி பாத்திமாவின் தற்கொலை சம்பவம் தொடர்பான பல்வேறு கேள்விகளை, சிபிஐ அதிகாரிகள் அப்துல் லத்தீபிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்குப் பிறகு அப்துல் லத்தீப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “2 ஆண்டுகளுக்குப் பின் சிபிஐ விசாரணைக்கு அழைத்திருந்தாலும் விசாரணை நேர்மையான முறையில் இருந்தது. அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் அளித்துள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இதுகுறித்து அவரின் வழக்கறிஞர் முகமதுஷா கூறும்போது, “இவ்வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டி உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம். நாளை தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்” என்றார்.

x