டெய்லரான கணவன் தான் விரும்பியபடி ரவிக்கை தைத்து தராத வருத்தத்தில், அவரது மனைவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது.
அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், சவால்களுமே வாழ்க்கையை சுவை உள்ளதாக மாற்றுகின்றன. விரும்பியபடி எல்லாமே அமைந்துவிட்டால் வாழும் வாழ்க்கையில் பொருள் ஏது. ஆனால் இந்தப் பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை; எல்லா நேரங்களிலும் வாய்ப்பதில்லை. அந்த நேரத்து ஆவேசம், கோபம், விரக்தி, அவசரம் என வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். ஓரிரு நிமிடங்கள் ஆசுவாசமாய் யோசித்திருந்தால் முட்டாள்தனத்தை முழுமூச்சாய் தவிர்த்திருக்கலாம்.
ஹைதராபாத், திருமலா நகரைச் சேர்ந்தவர் சீனிவாஸ். துணி தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், வீட்டில் மிஷின் வைத்து தைப்பதோடு புதுமையான முறையில் வீடுதேடியும் சேவை செய்து வருகிறார். வீடுவீடாகச் சென்று சேலையும் ரவிக்கை துணியையும் விற்பவர், பெண்கள் விரும்பியவாறு ரவிக்கை தைத்தும் தருகிறார். வெறுமனே டெய்லர் வேலை செய்யாது, சீனிவாஸின் வித்தியாசமான அணுகுமுறைக்கு அப்பகுதி பெண்களிடம் வரவேற்பும் இருந்திருக்கிறது.
இவரது மனைவி விஜயலட்சுமி. இந்தத் தம்பதிக்கு பள்ளி செல்லும் வயதில் 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். அண்மையில் சீனிவாஸ் வசமிருந்த சேலைகளில் ஒன்றை தனக்கு பிடித்திருக்கிறது என்று எடுத்துக்கொண்ட விஜயலட்சுமி, அந்த சேலைக்குப் பொருத்தமாகப் புதிய டிசைனில் ரவிக்கை தைத்து தரச் சொன்னாராம். பணி நெருக்கடியில் மனைவி எதிர்பார்த்தவாறு சீனிவாஸ் ரவிக்கை தைத்து தரவில்லையாம்.
இந்தப் பிரச்சினை தம்பதியர் இடையே சச்சரவாக வெடித்தது. ஊருக்கெல்லாம் பெண்கள் விரும்பியவாறு ரவிக்கை தைத்து தரும் கணவன், தனக்கு மட்டும் அவ்வாறு செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் விஜயலட்சுமி இருந்திருக்கிறார். நேற்று முன்தினம் இந்தப் பிரச்சினை மீண்டும் முளைத்தது. தைத்த ரவிக்கையை கணவனிடம் தந்த விஜயலட்சுமி, தான் விரும்பியவாறு அதில் திருத்தங்கள் செய்துதருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு அந்த முட்டாள் கணவன் மறுத்துவிட்டு, வேலை நிமித்தம் வெளியே சென்றிருக்கிறார். மனமுடைந்த விஜயலட்சுமி இது குறித்து அண்டை அயலில் புலம்பியிருக்கிறார்.
அன்று மாலை பள்ளி திரும்பிய பிள்ளைகள், தாய் கதவை திறக்காது போகவே தந்தை வரும் வரை காத்திருந்துள்ளனர். சீனிவாஸ் வந்ததும் கதவை உடைத்துப் பார்த்தபோது, அங்கே விஜயலட்சுமி தூக்கிட்ட நிலையில் இருந்தார். சீனிவாஸிடமும், பக்கத்து வீடுகளிலும் விசாரணை நடத்திய அம்பர்பேட்டை போலீஸார் சந்தேக மரணத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குடும்ப உறவுகளுக்கிடையே புரிதல், பக்குவம், நேசம், பொறுப்பு ஆகியவை அநியாயத்துக்கு குறைந்து வருவதையே, இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் உணர்த்துகின்றன.
தற்கொலை எண்ணத்துக்கு ஆளாவோர், உடனடியாக அதற்கென உதவக் காத்திருக்கும், 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்: சிநேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 -2464000. தமிழக அரசின் தற்கொலை தடுப்பு உதவி எண்: 104.