வீடியோ வெளியிட்ட போலீஸ் தம்பதி: விளக்கம் கொடுத்த காவல் துறை


காவல் தம்பதி

‘காவல் துறை குடியிருப்பில் இருக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை’ என்று தங்கள் சொந்தக் கதையை கண்ணீருடன் பேசி, வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளனர் திருச்சியைச் சேர்ந்த காவல் துறை தம்பதியினர்.

திருச்சி, கே.கே நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுகிறார் ஜனார்த்தனன். அவரது மனைவி சுமதி, கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர்கள், திருச்சி மார்க்சிங் பேட்டை பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் சி-10 என்ற வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.

அந்த வீடியோவில், ‘’எங்கள் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்கள் வருகின்றன. எங்களுக்கும், எங்கள் வீட்டுக்கும் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா பொருத்தி இருந்தோம். தற்போது அதை பாலக்கரை காவல் துறையினர் வேண்டுமென்றே அகற்றிவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

‘’காவல் துறையில் பணியாற்றும் தங்களுக்கு காவலர் குடியிருப்பில் போதிய பாதுகாப்பு இல்லை” என்று கண்ணீர்விடும் இவர்கள் சில உதாரணங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர். தலைமைக் காவலர் சிதம்பரம் என்பவர் வீட்டில் 33 பவுன் நகை திருடு போனதாகவும், பல இருசக்கர வாகனங்கள் திருடு போயிருப்பதாகவும், காவலர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா, மதுபோதையில் இளைஞர்கள் சுற்றித் திரிவதாகவும், இதனால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அவர்கள் அந்த வீடியோவில் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் காவல் துறையின் செயல்பாடுகளையும் அவர்கள் விமர்சித்துள்ளனர். ‘’காவல் துறை நன்றாகத்தான் உள்ளது. அதில் ஒரு சிலர் தகாத செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. காவல் துறையில் பணியாற்றும் நபர்களிடம் கடமைக்கு குறைகளை கேட்கிறார்கள். தமிழக அரசு தற்போது காவலர்களுக்கு வார ஓய்வு அளித்திருந்தாலும், அது நடைமுறைக்கு வரவில்லை. இதனால் தங்கள் குழந்தைகளுடன் நிம்மதியாக இருக்க முடியவில்லை” எனக்கூறும் இந்த தம்பதியர், உடனடியாக தமிழக முதல்வர் இப்பிரச்சினையில் தலையிட்டு தங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் மன உளைச்சளுக்கு ஆளாகியிருக்கும் தாங்கள், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து உடனடியாக காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, அதுகுறித்த விளக்கத்தையும் அளித்துள்ளனர். ‘’இவர்கள் எப்போதும் எதாவது பிரச்சினை செய்துகொண்டே இருப்பவர்கள். ஏற்கெனவே ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இருந்தபோதும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பிரச்சினை செய்தார்கள். அதனால் அவர்களுக்கு சார்ஜ் கொடுக்கப்பட்டது. அந்த வீட்டில் மின்சாரம் திருடி, அதற்கான அபராதமும் கட்டியிருக்கிறார்கள்.

மார்சிங்பேட்டை குடியிருப்புக்கு வந்தபிறகும் அவர்கள் மாறவில்லை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் தகறாறில் ஈடுபடுகின்றனர். அதனால் தொடர்ந்து அவர்கள் மேல் புகார்கள் வருகின்றன. சிசிடிவி கேமராவை பெண்கள் தண்ணீர் பிடிக்கும் இடத்தை நோக்கி வைத்திருந்தது குறித்து, அங்குள்ளவர்கள் புகார் கொடுத்தநிலையில்தான் அதை அப்புறப்படுத்தி உள்ளோம். துறையில், மேல் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி குறைகளை களைந்து வருகிறார்கள். மற்றபடி அவர்கள் துறைரீதியாக சொல்லும் குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை” என்று மாநகர காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

x