ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்: சென்னையில் இந்தோனேசிய இளைஞர் கைது


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. லாவோஸ் நாட்டில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்த இந்தோனேசியா இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாடுகளில் சென்னைக்கு அதிக அளவில் போதைப் பொருள் கடத்தி வரப்படவுள்ளதாக சென்னையில் சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அத்துறையின் தனிப்படை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் இன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, தாய்லாந்தில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் இந்தோனேசியா நாட்டைச் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் சுற்றுலா விசாவில், லாவோஸ் நாட்டில் இருந்து தாய்லாந்து வழியாக சென்னைக்கு வந்திருந்தார்.

அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை நிறுத்தி விசாரணை நடத்தி தீவிர சோதனை செய்தனர். பின்னர், அவர் வைத்திருந்த சூட்கேசை திறந்து சோதனை செய்த போது, அதில் ரூ.35 கோடி மதிப்புள்ள 3.3 கிலோ கொக்கைன் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்தோனேசியா நாட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு லோவோஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பல் கொடுத்த சூட்கேசை வாங்கி கொண்டு, லோவோஸ் நாட்டில் இருந்து தாய்லாந்து சென்று, அங்கிருந்து சென்னை வந்திருப்பது தெரியவந்தது.

இதற்கு முன்பும் சில முறை சென்னைக்கு போதைப்பொருள் கடத்தி வந்திருப்பது விசாரணையில் தெரிந்தது. சென்னையில் யாரிடம் போதைப் பொருளை கொடுக்க வந்தார் என்பது பற்றி அவரிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

x