திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், இன்று அதிகாலை ஆடு திருடர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றபோது, அக்கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
ஆட்டுக் கறிக்கு நல்ல விலை கிடைப்பதால், திருச்சி மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதிகளில் ஆடு திருடும் கும்பல்கள் அதிகரித்திருக்கின்றன.
குறிப்பாக நவல்பட்டு, திருவெறும்பூர், மணிகண்டம் கிராமப்புறப் பகுதிகளில் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், சமீபகாலமாக ஆடு திருடும் கும்பல்களின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆடுகள் சனிக்கிழமை இரவுகளில் திருடப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களில், ஆட்டுக்கறி விற்பனை நடைபெறுவதாகக் காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த சில நாட்களாக, சனிக்கிழமை இரவுகளில் காவல் துறையினர் சிறப்பு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று அதிகாலை (நவ.21) ஒரு கும்பல் ஆட்டோவில் ஆடுகளைத் திருடிச் செல்வதாக வந்த தகவலையடுத்து, நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், தனது இரு சக்கர வாகனத்தில் சென்று அவர்களைப் பிடிக்க முயன்றார். புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள களமாவூர் அருகே பள்ளத்துப்பட்டியில் மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே அவர்களை மடக்கிப் பிடித்தபோது, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச்சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, திருச்சி மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளும் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கின்றனர்.
காவல் உதவி ஆய்வாளரை ஆடு திருடும் கும்பல் வெட்டிப் படுகொலை செய்திருப்பது, திருச்சி காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.