சமூக ஊடகங்களில் சபலிஸ்டுகளுக்கு காத்திருக்கும் அபாயம்!


வில்லிவாக்கத்தைச் சேர்ந்த விக்ரம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது), சென்னை பெருநகர காவல் துறையிடம் புகார் ஒன்றை அளித்தார். அது தொடர்பாக விசாரித்து வரும் சைபர் க்ரைம் போலீஸார், தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர்.

போலீஸாரின் எச்சரிக்கையை முழுதாகப் புரிந்துகொள்ள, விக்ரமின் சோகத்தை அறிந்துகொள்வது உதவும். விக்ரமுக்கு முகநூல் வாயிலாக பெண் ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார். அந்தப் பழக்கம் அங்கிருந்து மெசஞ்சருக்கு குடிபெயர்ந்திருக்கிறது. அங்கே, அப்பெண்ணின் வாட்ஸ்அப் எண் கிடைக்க விக்ரம் குதூகலமடைந்திருக்கிறார்.

வாட்ஸ்அப் சாட்டிங் ஒரு கட்டத்தில், வீடியோவுக்கு முன்னேறி இருக்கிறது. அப்படி ஒருநாள் அந்தப் பெண்ணிடமிருந்து வாட்ஸ்அப் வீடியோ கால் வர, விக்ரம் பரபரப்பாகி இருக்கிறார். ஆனால், அந்த வீடியோ அழைப்பு ஓரிரு நிமிடங்களில் முடிந்திருக்கிறது. அந்த ஒருசில நிமிடமும் எதிர்முனையில், முகம் காட்டாத ஒரு பெண் ஏடாகூடமாய் காட்சியளித்திருக்கிறார். விக்ரம் தனது சபலத்திலிருந்து மீள்வதற்குள் அழைப்பு அறுபட்டுப்போனது. அத்தோடு அந்தப் பெண் விக்ரம் எண்ணை பிளாக் செய்துவிட்டார்.

குழம்பித் தவித்த விக்ரமுக்கு, பின்னர் வாட்ஸ்அப் வாயிலாகவே ஒரு படம் வந்தது. அதைப் பார்த்ததும் அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. அரைகுறையாக காட்சியளிக்கும் பெண்ணை, வீடியோ அழைப்பு வாயிலாக விக்ரம் வழிந்துகொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் ஸ்க்ரீன் ஷாட் அது. அந்த ஸ்க்ரீன் ஷாட்டுடன் இலவச இணைப்பாக ஒரு மிரட்டலும் வந்தது.

’சமூக ஊடகங்களில் இந்தப் படத்தையும், கைவசமிருக்கும் வீடியோவையும் வெளியிட்டு உன் மானத்தை பந்திவைக்கவா? அல்லது உடனடியாக ரூ.50 ஆயிரம் அனுப்புகிறாயா?’ என்று எதிர்முனை ஆண்கள் மிரட்டினார்கள். மானம், கவுரவம் இத்யாதிகளுக்கு பயந்த விக்ரம், மின்னணு பரிவர்த்தவனையில் கேட்ட பணத்தை அனுப்பித் தொலைத்தார். சில நாட்கள் சென்றிருக்கும். இன்னொரு படத்தை அனுப்பி, மற்றுமொரு தொகையைக் கேட்டு மிரட்ட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் விக்ரமுக்கு விபரீதம் முழுதாய் உறைத்தது.

மெசஞ்சர், வாட்ஸ்அப் என வசமாய் விரிக்கப்பட்ட வலையில் தான் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டதும், எதிர்முனையில் மிகப்பெரும் மிரட்டல் கும்பல் இயங்குவதும் அவருக்குப் புரிந்தது. விக்ரம் துணிந்து சென்னை காவல் துறையை நாடினார். புலன்விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீஸார், விக்ரமை மிரட்டும் கும்பல் குஜராத்திலிருந்து செயல்படுவதையும், அதையொத்த திருட்டுக் கூட்டம் நாடுமுழுக்க மறைந்திருந்து இயங்குவதையும் கண்டறிந்தனர்.

ஒரு விக்ரம், காவல்நிலையப் புகார் வரை துணிந்து வெளிப்பட்டிருக்கிறார். வெளித்தெரிந்தால் மானக்கேடு என்று பணத்தை அழுதுகொண்டிருக்கும் விக்ரம்கள் எத்தனையோ! இணையவெளியில் இடறும் தொடர்புகள், சமூக ஊடகங்களில் பழகும் முன்பின் அறியோதோர் ஆகியோரிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். அப்படியே சிக்கல்கள் எழுந்தால், உடனடியாக காவல் துறை உதவியை நாட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

முக்கியமாய் இம்மாதிரி விபரீத வம்புகளில் சிக்குவோரில் பெரும்பாலானோர் சபலிஸ்டுகள் என்பதால், இவர்கள் தங்கள் வங்கி இருப்பைப் பாதுகாக்கவாவது ஜொள்ளர் அடையாளத்தை துறந்து நல்லவராக முயற்சிக்கலாம்.

x