48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம்: கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதா?


தற்கொலை செய்துகொண்ட கோவை பள்ளி மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக, 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சையும் எழுந்திருக்கிறது. இது கருத்துச் சுதந்திரத்தை நெரிக்கும் நடவடிக்கை என சிலர் வாதிடுகிறார்கள். அது சரியா?

2012-ல் அமலுக்கு வந்த போக்சோ சட்டம், சிறார் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு முடிவுகட்டும் வகையில் கொண்டுவரப்பட்டது. பாலியல் குற்றங்களுக்கு ஆளாகும் சிறார்கள் நீதி பெறவும், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அளிக்கவும் வகைசெய்யும் இந்தச் சட்டம், பாதிக்கப்பட்ட சிறார்களின் அடையாளத்தை வெளியிடாமல் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தும் வகையில் இயற்றப்பட்டதாகும்.

சிறார் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகளில், பாதிக்கப்பட்டவரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறக் கூடாது என்றும் போக்சோ சட்டம் கூறுகிறது. இந்நிலையில், ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட, கோவை மாணவி குறித்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகளும், குரல் பதிவுகளும் வெளியாகின. இது தொடர்பாக, 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஒருபுறம் இதைப் பலர் வரவேற்றாலும், சிலர் இதன் விபரீதம் புரியாமல் கருத்துச் சுதந்திரம் என்கிற ரீதியில் இந்த நடவடிக்கையை விமர்சிக்கின்றனர்.

வழக்கறிஞர் ரமேஷ்

இதுகுறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷிடம் பேசினோம்.

“இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாகச் செய்திகள் போடக்கூடாது என யாரும் தடை சொல்லவில்லை. போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறார்களின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என அந்தச் சட்டத்திலேயே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றமும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. இப்போது யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டிருப்பது என்பது, செய்தியை வெளியிட்டதற்காக அல்ல. பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காகத்தான். இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது அல்ல. கருத்துச் சுதந்திரத்தை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கை. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, பாதிக்கப்பட்ட சிறாரின் வீட்டுக்கேச் சென்று அவர்களின் பெற்றோர், உறவினரிடம் பேட்டி எடுப்பது, காணொலி வெளியிடுவது, தனிப்பட்ட விவரங்களைச் சொல்வது எனக் கண்மூடித்தனமாகச் சிலர் செயல்படுகின்றனர். ஒரு தடவை இப்படி நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான போக்குகள் முடிவுக்கு வரும்” என்கிறார் ரமேஷ்.

இந்த வழக்குக்குப் பின்னராவது, சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளும் என நம்புவோம்!

x