விபசார புரோக்கர்களிடம் லஞ்சம்: காவல் ஆய்வாளர்கள் மீது வழக்குப் பதிவு!


சென்னை, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சாம் வின்சென்ட். அதேபோல் சைதாப்பேட்டை சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் சரவணன். இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு, விபசார தடுப்புப் பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றினர்.

அந்த சமயத்தில், விபசார புரோக்கர்கள், மசாஜ் பார்லர் பெயரில் பாலியல் தொழில் செய்ததாகச் சொல்லப்பட்ட பார்லர் உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் லஞ்சம் பெறுவதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பிரபல புரோக்கர்களான பூங்கா வெங்கடேசன், ரவி ஆகியோரிடம் வாங்கிய லஞ்சத்தை பங்கு பிரிப்பதில் சாம்வின்சென்ட்டுக்கும் சரவணனுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. குறிப்பாக, அதிக அளவு லஞ்சம் கிடைப்பதாகச் சொல்லப்படும் சென்னை நகரை யார் கைப்பற்றுவது என்பதிலும் இருவருக்கும் இடையே அந்த காலகட்டத்தில் கடும் மோதல் நிலவியதாகவும், இதற்காக அமைச்சர்கள் அளவில் சிபாரிசுக்குப் போனதாகவும் கதைகள் உண்டு.

இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளான இருவர் மீதும் அப்போதைய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் துறை ரீதியான விசாரணை நடத்தி, பணியிட மாற்றம் செய்தார்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர்கள் சாம் வின்சென்ட், சரவணன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இருவருக்கும் சொந்தமான இடங்களில் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ள ஆய்வாளர் சாம் வின்சென்ட் வீடு, ரெட்டை ஏரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு; அதேபோல புழுதிவாக்கம் ஜெயலக்ஷ்மி நகரில் உள்ள ஆய்வாளர் சரவணன் வீட்டிலும் துணை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையிலான, 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

x