திருவிடைமருதூர் திமுக பிரமுகர் கொலை: நெருங்கிய உறவினரிடம் போலீஸார் விசாரணை


கலைவாணன்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன் (30). விவசாயி. திருப்பனந்தாள் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ-வான கா.சோ.க. கண்ணனின் சகோதரி மகன் ஆவார்.

கடந்த 12-ம் தேதி இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற கலைவாணன் வீடு திரும்பவில்லை. தேடிப்பார்த்த போது அவர் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து பந்தநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் கலைவாணனின் வைக்கோல் போருக்கு சிலர் தீ வைத்தனர். அந்த இடத்தில் 'தொடரும்' என எழுதப்பட்டிருந்ததுடன், அவரது வீட்டுக்கு அருகில் கிடந்த ஒரு துண்டுச் சீட்டில், ‘தொடரும், மகேஸ், கலைவாணன் உயிரா, பொருளா அடுத்தது?’ என எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கலைவாணன் பந்தநல்லூர் போலீஸில் அப்போது புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் கலைவாணன் கொலை தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் உட்பட 11 பேரிம் விசாரணை நடத்திய போலீஸார், கலைவாணன் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வயலில் இருந்த அவரது செல்போன் மற்றும் ஆயுதங்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், கலைவாணன் கொலை செய்யப்பட்ட நாளிலிருந்து அவரது நெருங்கிய உறவினர் ஒருவரை போலீஸார், ரகசியமாக கண்காணித்தும் வந்தனர். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்த நிலையில், கலைவாணனிடம் செல்போனில் இறுதியாக 3 முறை அந்த நெருங்கிய உறவினர் பேசியிருப்பதும் தெரிய வந்தது.

போலீஸாரின் தொடர் விசாரணையில், கலைவாணனிடம் அந்த நெருங்கிய உறவினர் பல லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு திருப்பித் தரவில்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. தனக்குத் தரவேண்டிய பணத்தை கலைவாணன் கேட்டதால், ஆத்திரமடைந்த அந்த நெருங்கிய உறவினர், கலைவாணனை கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்தக் கொலை தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இன்று இரவுக்குள் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படலாம் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

x