குமரியில் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல்: 3 போலீஸார் சஸ்பெண்ட்


ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் கனிமவள லாரி ஓட்டுனர்களிடம் இருந்து போலீஸார் லஞ்சம் வாங்கும் வீடியோவி்ல் உள்ள காட்சி.

நாகர்கோவில்: கன்னியாகுமரி சோதனை சாவடியில் கனிமவள லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் ஆனதையடுத்து 3 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்திற்கு திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக 4 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கணக்கான லாரிகளில் பாறை கற்கள் ஏற்றிச் செல்லப்பட்டு வருகிறது.

மலைகள் நிறைந்த கேரளாவில் இருந்து மலைகளை உடைத்தெடுக்க கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறை நடைமுறையில் உள்ளதால் அங்கு கனிம வளங்கள் பாதுகாக்கப்படுகிறது. அதே நேரம் தமிழகத்திலிருந்து கனிம வளங்கள் தொடர்ச்சியாக ஏற்றி செல்லப்படுகிறது. இதற்கு குமரி மாவட்டத்தில் தொடர்ந்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அளவுக்கு அதிகமான எடையுடன் லாரிகள் அதிவேகமாக செல்வதால் பல விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்ட நிலையில் அதிக பாரம் ஏற்றி செல்வதை தடுத்திட பொதுமக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இதன் பலனாக ஆரல்வாய்மொழியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டது

அதிக பாரம் ஏற்றிச் செல்வதை தடுப்பது, முறையான பாஸ் உள்ளதா என ஆய்வு செய்வது போன்ற பணிகள் இந்த சோதனை சாவடியில் போலீஸார் மூலம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெற்று வரும் பணிகளுக்கு இடையே லாரி ஓட்டுநர்களிடம் இருந்து போலீஸார் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அதில் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர் பணத்தை வாங்கி பக்கத்தில் இருந்த அட்டை பெட்டியில் போட்டு வைப்பதும், புத்தகத்திற்கு அடியில் மறைத்து வைப்பதும், அவர் அருகே மேலும் இரு போலீஸார் சோதனையில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் தமிழகத்திலிருந்து கனிம வளங்கள் கடத்தலுக்கு துணை போவதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றம் சாட்டிய நிலையில், காவலர் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலான நிலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜாண் போஸ்கோ, இரணியல் காவல் நிலைய சேர்ந்த ஏட்டு தர்மராஜ், ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பேச்சிநாதபிள்ளை ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து. குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார்.