ஆண் நண்பர்களுடன் மது அருந்தியதால் ரூ.40 லட்சம் பறிகொடுத்த பெண் தொழிலதிபர்


சென்னை, கானாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் தனியார் தொலைக்காட்சி விளம்பரதாரர், பதர் ஜஹான்(45). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கணவர் காலமானதால், சொத்துகளை விற்று வந்த பணத்தைக் கொண்டு தனது மகளை லண்டனில் படிக்க வைத்து வருகிறார்.

மது போதைக்கு அடிமையான பதர் ஜஹானுக்கு, அவரது கார் ஓட்டுநர் மூலம் ஐடி கம்பெனி ஊழியர்கள் பிரபாகரன்(24), ஐசக் டேனியல்(23) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், இருவரும் பதர் ஜஹானின் வீட்டுக்கு அடிக்கடி வந்து மது அருந்திவிட்டுச் செல்வது வழக்கம்.

அதேபோல், கடந்த 6-ம் தேதி இரவு பதர் ஜஹானின் வீட்டுக்கு வந்த இருவரும் அவருடன் சேர்ந்து மது அருந்திவிட்டுச் சென்றுள்ளனர். காலையில் எழுந்த பதர், எதேச்சையாக பீரோவைப் பார்த்தபோது அதில் இருந்த ரூ.40 லட்சம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பதர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்து, ஆண் நண்பர்களின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வுசெய்த போலீஸார், அவர்கள் பாண்டிச்சேரியில் தனியார் விடுதியில் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர். உடனே தனிப்படை போலீஸார் பாண்டிச்சேரியில் வைத்து இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.27 லட்சத்தைப் பறிமுதல் செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருநின்றவூர் பிரபாகரன்(24), ஊத்துக்கோட்டை ஐசக் டேனியல்(23) என்பது தெரியவந்தது. இருவரும் காரப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாகத் தங்கி, ஒரே ஐடி கம்பெனியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பதர் ஜஹான் அறிமுகமானதாகவும், பின்னர் அடிக்கடி பதர் வீட்டுக்குச் சென்று ஒன்றாக மது அருந்தி வந்ததும் தெரியவந்துள்ளது. அப்போது, பதர் சொத்துகளை விற்று ரூ.40 லட்சத்தை வீட்டில் வைத்திருப்பதை அறிந்த இருவரும் அந்தப் பணத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

பதர் அளவுக்கு அதிமான போதையில் இருக்கும்போது, பீரோவில் வைத்திருந்த பணப் பையிலிருந்து 3, 10 லட்சம் என சிறுகச் சிறுக திருடியவர்கள், ஒரு கட்டத்தில் மொத்தப் பணத்தையும் அபகரிக்க திட்டம் தீட்டினர். அதன்படி கடந்த 6-ம் தேதி பதர் வீட்டுக்கு வந்து மது அருந்தியபோது, பதருக்கு அளவுக்கு அதிகமான மதுவை ஊற்றிக் கொடுத்து அவர் தூங்கியவுடன், பீரோவில் இருந்த ரூ.31 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

x