செல்போன் நிறுவன சேவைபோல் லட்சக்கணக்கில் மோசடி: ‘ஜம்தாரா கும்பல்’ கைது!


சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), செப்டம்பர் 26-ம் தேதி சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீஸில் புகார் ஒன்றை அளித்தார்.

இதன்படி, சிம் கார்டுக்கான ஆவணங்கள் சமர்பிக்கப்படாமல் இருப்பதால், 24 மணி நேரத்துக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் செல்போன் சேவை துண்டிக்கப்படும் என்றும் மணிகண்டன் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்திருக்கிறது. மேலும் செல்போன் சேவையைத் தொடர வேண்டுமென்றால், வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் எனவும் அவருக்கு சொல்லப்பட்டிருக்கிறது. குறுஞ்செய்தியில் வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, உடனடியாக ரூ.5 பணம் செலுத்த வேண்டுமெனவும், அதற்காக www.rechargecube.com என்ற இணையதளத்திலிருந்து fast support என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக ரூ.5 பணம் செலுத்த வேண்டும் எனவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதை நம்பி செயலியை பதிவிறக்கம் செய்த மணிகண்டன், தனது வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவிட்டு பணம் அனுப்பியுள்ளார்.

சில நிமிடங்களில் மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. அதில், பணம் வந்து சேரவில்லை என்றும் மீண்டும் வேறு வங்கிக் கணக்கிலிருந்து பணம் செலுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால், சேவை துண்டிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது.

இதை நம்பிய மணிகண்டன், மீண்டும் தனது மனைவி வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்பியுள்ளார். இதேபோல், 3 முறை வெவ்வேறு வங்கிக் கணக்கிலிருந்து பணம் செலுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் மூன்று வங்கிக் கணக்கிலிருந்தும் ரூ.90,000, ரூ.8 லட்சத்து 60 ஆயிரம், ரூ.3.59 லட்சம் என மொத்தம் ரூ.13 லட்சத்து 9 ஆயிரத்து 984 ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. தான் ஏமாந்ததை உணர்ந்த மணிகண்டன், இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மோசடி நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்போன் எண் கொல்கத்தாவில் இருப்பதுபோல காண்பித்தது. மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து, கொல்கத்தா அருகில் உள்ள ஹவுரா நகருக்கு விரைந்துசென்று 3 பேர் கொண்ட மோசடி கும்பலைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிஷ்வ நாத் மண்டல் (25) , பாபி மண்டல் (31), கொல்கத்தாவைச் சேர்ந்த ராம்புரோஷோத் நாஷ்கர் (30) என தெரியவந்தது. குறிப்பாக ஜார்கண்ட்டில் உள்ள ஜம்தாரா மாவட்டம், பல்வேறு சைபர் மோசடிகளுக்கு கூடாரமாகத் திகழ்வது தெரியவந்தது.

ஜம்தாரா மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்குச் சொந்த ஊரில் வேலைக்கேற்ப ஊதியம் கிடைக்காததால், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டுப் பிற மாநிலங்களுக்கு வேலைகளுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அங்குக் கணினி உட்பட சைபர் சம்பந்தமான அனைத்து தொழில்நுட்பங்களையும் சிறப்பாகக் கற்றுக்கொண்டு, பிற மாநிலங்களில் ஊடுருவி சைபர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக வங்கி அதிகாரி எனக்கூறி, ஏடிஎம் கார்டு காலாவதியாகிவிட்டதால் அதைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறி வங்கி அட்டை விவரங்களைப் பெற்று மோசடி, ஓடிபி மோசடி, பரிசு கூப்பன் விழுந்திருப்பதாகக் கூறி மோசடி, லோன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி என புதுப்புது வகைகளில் கொள்ளையடித்து வந்துள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.11.20 லட்சம் பணம், 148 கிராம் தங்க நகைகள், 20 செல்போன்கள், 160 சிம் கார்டுகள், 19 வங்கிக் கணக்கு அட்டைகள், 4 ஸ்வைப்பிங் மிஷின்கள், ஹோண்டா கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், வங்கி, வாடிக்கையாளர் சேவை எனக் கூறி ஓடிபி எண் மற்றும் செயலியை பதிவிறக்கம் செய்யக் கூறினால், பொதுமக்கள் தங்களது தகவல்களை யாருக்கும் அளிக்க வேண்டாம் என காவல் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

x