கரோனா தொற்றுக் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணிகளுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தில் செல்லும் முன், கட்டாயம் கரோனா தடுப்பு ஊசி போட்டிருக்க வேண்டும். அல்லது பயணத்துக்கு முன்னதாக (பிசிஆர்) கரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக வெளிநாடு செல்ல விரும்பும் பயணிகள், கட்டாயம் கரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
அதற்காக விமான நிலையத்தில், கரோனா பரிசோதனை செய்யப் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ரூ.500-க்கு கரோனா நெகட்டிவ் சான்று அளிக்கப்படுவதாக விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இவ்வாறு சென்னையில் மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஓன்றை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, மண்ணடி தம்பு செட்டி தெருவில் ஹாரிஸ் பர்வேஸ் (30) என்பவர் மருத்துவப் பரிசோதனை மையம் நடத்தி வருகிறார். இவரது பரிசோதனை மையத்தில் கரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.
இந்நிலையில் பர்வேஸ் நடத்தி வரும் பரிசோதனை மையத்தின் பெயரில், போலியாக கரோனா சான்றிதழ் வழங்கப்படுவதாக பர்வேசுக்கு தகவல் கிடைத்தது. மேலும் இது தொடர்பாக, விளம்பரம் ஒன்று வாட்ஸ்ஆப்பில் வருவதை பர்வேஸ் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் விமானப் பயணிகளுக்கு ரூ.500 கட்டணத்தில், உடனடியாக கரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இதையடுத்து விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு பர்வேஸ் வாட்ஸ் ஆப் செய்து, ரூ. 500-ஐ கூகுள்பே மூலமாக அனுப்பிய உடனே, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் பர்வேசின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பர்வேஸ், உடனடியாக இதுகுறித்து பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீஸார் விளம்பரத்தில் குறிப்பிட்ட எண்ணை வைத்து, மோசடியில் ஈடுபட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இன்பர்கான் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நண்பர் உதவியுடன் கடந்த 6 மாதங்களாக இந்த மோசடி வேலையில் அவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் இன்பர்கான், வெளிநாட்டில் இருந்து பொருட்களைக் கடத்தி வரும் ’குருவி’யாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலுக்காக விமானம் மூலம் வெளிநாடு செல்லும் ’குருவி’களை குறிவைத்து, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்தும் கடந்த 6 மாதத்தில் 500-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.500 பெற்றுக்கொண்டு போலி கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள இன்பர்கான் கூட்டாளியை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
எனவே, விமானப் பயணிகள் இதுபோன்ற போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.