சென்னை: சென்ட்ரல் ரயில் கோச் உணவகத்தில் ரூ.2.42 லட்சம் பணம், செல்போன்களை திருடிச் சென்ற வடமாநில ஹோட்டல் ஊழியரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கார் பார்க்கிங் அருகே ரயில் கோச் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் 10-க்கும் மேற்பட்ட வடமாநில ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இர்பான் என்ற இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்து, ஹவுஸ் கீப்பீங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை உணவகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த இர்பான் கல்லாப் பெட்டியை நோட்டமிட்டுள்ளார்.
பின்னர், கல்லா பெட்டி அருகே காசாளர் இல்லாத நேரத்தில் யாருக்கும் தெரியாமல், அதில் இருந்த பணம் ரூ.1,66,265-ஐ எடுத்துக் கொண்டு, உணவகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கியிருக்கும் பெரியமேடு ஊத்தாங்காட்டான் தெருவில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சில ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு தெரியாமல், ஊழியர்களின் பணம் ரூ.75,925 மற்றும் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 6 செல்போன்களையும், தனது உடமைகளையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இதற்கிடையில் கல்லாப்பெட்டியை திறந்த பார்த்த காசாளர் அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பார்த்த போது, இர்பான் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உணவகத்தின் மேலாளர் பாலாஜி, பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பணத்துடன் தப்பி ஓடிய ஊழியரை தேடி வருகின்றனர்.